election-2019

img

பாஜகவைத் தோற்கடித்து இந்தியாவைப் பாதுகாப்போம் - சிபிஎம்

பாஜகவைத் தோற்கடித்து இந்தியாவைப் பாதுகாப்போம். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் கரங்களை வலுப்படுத்துவோம் மதச்சார்பற்ற அரசாங்கத்தை உறுதிப்படுத்துவோம் என்று விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அன்பிற்குரிய நண்பர்களே,

பாராளுமன்றத் தேர்தலுக்கான காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு உணவிடுகின்றவர்களாக இருக்கின்ற உங்களுக்கு அதாவது விவசாயிகள், விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இந்தத் தேர்தல்களில் முக்கியமான பங்கு இருக்கிறது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றிருக்கின்றன. உங்களுடைய போராட்டங்கள் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை அசைத்துப் பார்த்திருக்கின்றன. கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை தேசிய அரசியலில் முன்னுக்கு உங்களுடைய போராட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீங்கள் நடத்திய இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் உங்களுடனேயே நின்றிருக்கின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் உங்களுக்காக தங்களுடைய குரலை தொடர்ந்து எழுப்பி இருப்பவர்களாக இருக்கின்றனர். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் மற்றும் கடன் தள்ளுபடிக்கான உத்தரவாதம் ஆகியவற்றை அளிக்கின்ற வகையில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற உங்களுடைய பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே தனிநபர் மசோதாக்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கும் இந்த ஆட்சிக் காலமானது ஒரு வாழ்வா, சாவா போராட்டமாகவே இருந்திருக்கிறது. நீங்கள் காட்டிய கோபத்தின் விளைவாக, இந்த நிதியாண்டில் உங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் கொடுப்பதற்கான திட்டத்தை திடீரென்று இறுதி நிமிடத்தில் விவசாயிகளுக்கென்று மோடி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கொடுக்கப்பட்டிருந்த அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த ஐந்தாண்டுகளாக நிறைவேற்றாத இந்த மோடி அரசாங்கம், இப்போது சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் உங்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அதிலும்கூட குத்தகை விவசாயிகள், பழங்குடி விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளனர்! இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றதாகவே இருக்கின்றது.  


 விவசாயிகளுக்கு விரோதமான பாஜக ஆட்சியின் கொள்கைகள்


 

2014 பாராளுமன்றத் தேர்தல்களின் போது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளைச் சற்றே பாருங்கள்

விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

பயிர் இழப்பிற்கு ஈடாக முழு காப்பீடு உறுதி செய்யப்படும்.

ஆனால் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பிறகு இந்த ஐந்தாண்டுகளில் நடந்திருப்பதென்ன?

 

விவசாயிகள் இனிமேல் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை என்ற மோடியின் வாய்ச்சவடால் பொய்யாகிப் போனது

பாஜக ஆட்சிக் காலத்தில் விவசாய நெருக்கடிகள் தீவிரமடைந்ததன் விளைவாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது. பாஜக ஆட்சியின் முதல் ஆண்டிலேயே விவசாயிகளின் தற்கொலைகள் 42 சதவிகிதம் உயர்ந்து விட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் மட்டுமே 48,000 விவசாயிகளுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்கின்ற விவசாயிகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளிடுவதை நிறுத்தியது மட்டுமே, இந்த தற்கொலைகள் குறித்து பாஜக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கை மூலமாக இந்த அரசாங்கம் உண்மைகளை மறைத்தது மட்டுமல்லாமல், இறந்து போன விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் தர மறுத்திருக்கிறது.  

 

குறைந்தபட்ச ஆதார விலை – பாஜக ஆட்சியின் செப்படி வித்தைகளும், விவசாயிகளுக்குச் செய்த துரோகமும்

சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவதில் பாஜக ஆட்சி செய்திருக்கும் செப்படி வித்தைகளும், துரோகங்களும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதாக இருக்கவில்லை.மொத்த பயிர் உற்பத்திக்கான செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு ஒன்றரை மடங்காக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அது சந்தையைப் பாதித்து விடும் என்று கடந்த 2015 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை மோடி அரசாங்கம் பதிவு செய்தது. இதன் மூலம் விவசாய வர்த்தகத்திற்கு சிவப்பு கம்பளமும், விவசாயிகளுக்கு பட்டை நாமமும் போடுகின்ற பாஜக அரசின் கார்ப்பரேட் விசுவாசம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.   

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2340 என்று சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த நிலையில், பாஜக அரசு அதனை வெறுமனே ரூ.1750 என்று அறிவித்தது. மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கு மறுத்த நிலையில் ரூ.800 – 100க்கு நெல்லை விற்க வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டதுதான் உண்மையில் நடந்தேறியது.

 

விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் – உண்மையில் யார் பயனடைந்தார்கள்?  

விவசாய இடுபொருட்களின் கடுமையான விலை உயர்வு, பற்றாக்குறை வருமானம் ஆகியவை நில உரிமை வைத்திருக்கும் விவசாயிகளில் 86 சதவீதம், குத்தகை விவசாயிகளில் 80 சதவீதம் பேரை கடன் வலைக்குள் சிக்க வைத்திருக்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத இந்த விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளைத் தொடர்வதற்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஆனால் மோடி அரசாங்கம் இவர்களின் இந்தக் கோரிக்கையை எவ்வாறு எதிர்கொண்டது?

தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக கடன் தள்ளுபடி குறித்து பேசுவதையே தள்ளிப் போடுகின்ற அரசாங்கமாக பாஜக அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்ற இந்த கடன் தள்ளுபடியை ‘லாலிபாப்’ என்று கிண்டல் செய்யும் அளவிற்கு மோடி செல்கிறார். ஆனால் அதே லாலிபாப்களை அம்பானி, அதானி போன்ற பாஜகவிற்கு மிக நெருக்கமான பெருமுதலாளிகளுக்குத் தருவதில் எவ்விதத் தயக்கமும் இல்லாதவராகவே அவர் இருந்து வருகிறார். கோடிக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைக்காத கடன் தள்ளுபடி, விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலான கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் மிக எளிதாக இந்த பாஜக ஆட்சியில் கிடைத்து விடுகிறது.

இத்தகைய பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய 15 லட்சம் கோடி ரூபாய் பணம் திரும்ப வாராக் கடனாக மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.

இவர்களோடு வங்கிகளில் கடன் வாங்கி, அதனைச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி போன்றவர்களும் இருக்கின்றனர்.

 

பயிர் இழப்பிற்கு ஈடாக முழு காப்பீடு உறுதி செய்யப்படும் – பயனடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே

பாஜக அரசு கொண்டு வந்த பசல் பீம யோசனா திட்டம் விவசாயிகளுக்கான திட்டமாக இருக்கவில்லை. மகாராஷ்ட்ராவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், 2.8 லட்சம் சோயா பயிர் விளைவித்திருந்த விவசாயிகளிடமிருந்து 19 கோடி, ரூபாய் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து 154 கோடி ரூபாய் என்று மொத்தமாக காப்பீட்டுத் தொகையாக 173 கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்ட ரிலையன்ஸ் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாகத் திருப்பி அளித்தது. இதன் மூலம், எந்தவொரு முதலீடும் செய்யாமலேயே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 130 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.  

 

விவசாயம் சார்ந்த பிற தொழில்களிலாவது விவசாயிகள் விட்டு வைக்கப்பட்டார்களா? 

மக்களுக்குப் பதிலாக கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு முன்னுரிமை வழங்கியதன் மூலம் கிராமப் பகுதிகளில் கால்நடைகளைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கால்நடைகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், அவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களும் ’கோமாதவைப் பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பயனற்று ஓய்ந்து போன கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான செலவுகள் கூடுதலாக விவசாயிகளின் தலையில் ஏற்றப்பட்டிருக்கின்றது.

பால் மற்றும் பால் பண்ணை சார்ந்த பொருட்களை இந்திய சந்தைக்குள் தாராளமாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதித்து, உள்ளூரில் தயாராகும் பொருட்களை வீணடித்ததன் மூலம் அந்த பால் உற்பத்தியாளர்களை இந்த பாஜக அரசாங்கம் கடன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது.  

 

கிராமப்புறத் தொழிலாலர்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றும் வகையில் திட்டமிடப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அழிக்கப்பட்டு வருகிறது

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், கிராமப்புறத்தில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கு பெருமளவில் உதவி வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அளித்து வருகின்ற நிதியைக் குறைத்ததன் மூலம் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதரம் சீர்குலைக்கப்பட்டு இருக்கிறது.

2010-11ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதவீதம் என்று நிதி ஒதுக்கப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு 2017-18ஆம் நிதியாண்டில் 0.38 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய தொகையை விட அதிகமாகச் செலவழித்த 19 மாநில அரசுகள் தங்களுடைய வருவாயிலிருந்து 3972 கோடி ரூபாயை இழந்திருக்கின்றன.

இந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ஒன்பது கோடிப் பேர் வேலை தேடி வந்த போது, ஏழரைக் கோடிப் பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் வேலை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பட்டிருக்கின்றனர்.

மோடி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பாக 2013-14 நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் கட்டாயம் வேலை அளிக்கப்பட வேண்டிய 100 நாட்கள் வேலையைப் பேற்ற குடும்பங்கள் 40 லட்சம் என்றிருந்த நிலை மாறி, 2017-18 நிதியாண்டில் அது 30 லட்சம் குடும்பங்களாக குறைந்து போய் விட்டது. 

வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் தராமல் காலம் தாழ்த்துவது, 15 நாட்களுக்கு மேல் காலம் தாழ்த்தி ஊதியம் வழங்கும் போது தரப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தர மறுப்பது, ஊதிய உயர்வை அளிக்காமல் இருப்பது போன்று இந்த அரசின் முடிவுகள் அனைத்தும் கிராமப்புறத்தில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றும் வேலையை மட்டுமே செய்து வருகின்றன.

 

ஆதிவாசிகளின் நிலங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளின் நலன் காப்பதற்காக ஆதிவாசிகளை வனங்களில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் பாஜக அரசாங்கம்

நிலம் கையகப்படுத்துவதில் பாஜக அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைகள் ஆதிவாசிகளின் வன உரிமைகள் வரை நீண்டிருக்கின்றது. கடந்த ஐந்தாண்டுகளில் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகம் சுரங்க சட்டம்,ஈடு செய்யும் காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல அறிவிக்கைகள் மூலமாக பல சட்டங்களையும் திருத்தி உள்ளது. இதுவரையிலும் வன உரிமைச் சட்டத்தின் மூலமாக ஆதிவாசிகளுக்குத் தரப்பட்டு வந்திருக்கின்ற உரிமைகளை இந்த பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கின்றது.

பாஜக ஆட்சியில் ஆதிவாசிகளுக்கான வன உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆதிவாசிகள் தங்கியிருக்கின்ற நிலங்கள் பிடுங்கப்பட்டு, பெரும் நிறுவனங்களிடம் சுரங்கத் தொழில்களை நடத்துவதற்காக அந்த நிலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. ஏறத்தாழ 23.30 லட்சம் ஆதிவாசி குடும்பங்கள் மற்றும் பாரம்பரியமாக காடுகளில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் காடுகளில் இருந்து துரத்தப்பட்டுள்ளதாக, 2018 டிசம்பரில் கிடைத்திருக்கும் தாவுகள் தெரிவிக்கின்றன்.

ஆதிவாசிகளின் உரிமைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு நின்று, ஆதிவாசிகளுக்கு துரோகம் இழைத்ததன் விளைவாக உச்சநீதிமன்றம் காடுகளில் இருந்து ஆதிவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இருந்தாலும் 2019 ஜூலை வரையிலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், தீர்ப்பு வருகின்ற வரையிலும் லட்சக்கணக்கான ஆதிவாசி மக்களின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது.  

 

வகுப்புவாதம் கொண்டு விவசாயிகளைப் பிரித்தாள நினைக்கும் பாஜக மோடி அரசாங்கம்

விவசாயிகளுக்கெதிரான தன்னுடைய கொள்கைகளை மறைப்பதற்காக, மதத்தின் பெயரால் வுகுப்புவாத முழக்கங்களையும், வெறுப்பு பேச்சுக்களையும் முன்வைத்து விவசாயிகளைப் பிரித்து வைக்கின்ற முயற்சிகளை மோடி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பசு பாதுகாப்பு என்ற பெயரால் கிராமப்புற இந்தியாவில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சாதிய அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு வருகின்றனர். தங்களுடைய ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் இத்தகைய முயற்சிகளை விவசாயிகள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

 

கிராமப்புற இந்தியாவின் மீதான துல்லிய தாக்குதலாக மாறிப் போன பணமதிப்பு நீக்க அறிவிப்பு

புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தை செல்லாது என்று அறிவித்த போது, கிராமப்புறப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போனது. மோடியால் அரங்கேற்றப்பட்ட இந்த முட்டாள்தனமான செயல் விவசாயிகளின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அந்த அறிவிப்பிற்கு முந்தைய இரண்டாண்டுகளில் ஏற்பட்டிருந்த மிகப் பெரிய வறட்சியில் இருந்து விவாசாயிகள் மீண்டு வந்து, தங்களுடைய விளைபொருட்களைச் சந்தைக்கு கொண்டு வரவிருந்த வேளையில் மோடியின் இந்த அறிவிப்பு விவசாயிகளை சொல்லொண்னாத் துயரில் ஆழ்த்தியது.

கூட்டுறவு வங்கிகளில் செல்லாஅது என்று அறிவிக்கப்பட்ட பழைய பணத்தாள்களை மாற்றிக் கொள்ள முடியாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் போன போது விவசாயம் நொடித்துப் போனது.

விதைகளோ, உரங்களோ வாங்க முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பணப் பற்றாக்குறையால், அன்றாடம் விற்கப்பட வேண்டிய காய் கனிகள் வாங்குவாரற்று அழுகிப் போயின. பணமதிப்பு நீக்க அறிவிப்பு கிராமப்புறப் பொருலாதாரத்தை முற்றிலும் அடியோடு அழித்து விட்டது.

 

இந்தத் தேர்தலில் உங்களுடைய வாக்குகள்

இந்த நிலைமையில்தான் நீங்கள் உங்களுடைய வாக்குகளைச் செலுத்தப் போகிறீர்கள்.

விவசாயிகளையும், கிராமப்புறத் தொழிலாளர்களையும் ஏமாற்றி வருகின்ற மோடி அரசாங்கத்தின் பொய்கள், அது குறித்த அனுபவங்கள் நேரடியாக உங்களிடம் இருக்கின்றன. எந்தவொரு விவசாயியும் இவர்களுக்கு தங்களுடைய வாக்குகளைச் செலுத்தக் கூடாது. எந்தவொரு கிராமப்புறத் தொழிலாளியும் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அனுவங்களின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களிடம் கேட்டுக் கொள்கிறது.

உங்களுடைய உரிமைகளையும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும் பாதுகாக்கின்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும், இடதுசாரி வேட்பாளர்களுக்கும் உங்களுடைய வாக்குகளை அளிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். 

-தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு,

விருதுநகர்.

;