கோவை, ஏப். 2-
பொய் வாக்குறுதியை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த மோடியின்மோசடித்தனத்திற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார். 17 ஆவது மக்களவை தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் செவ்வாயன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டார். கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள ஹோசிமின் நகரில் துவங்கிய வாக்கு சேகரிப்புசுற்றுப்பயணம் சிவானந்தாகாலனி, வள்ளுவர் வீதி, காந்திபுரம் பகுதிகள், சக்திரோடு, 100 அடி சாலை, நஞ்சப்பாசாலை, வி.கே.கே.மேனன் ரோடு, சித்தாபுதூர், திருச்சி சாலை, நஞ்சுண்டாபுரம் சாலை, பங்கஜமில் சாலை, சௌரியபாளையம் சாலை, கணேசபுரம், புலியகுளம் ஆகிய தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு சுற்றுபயணம் மேற்கொண்டார்.இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட மோடி பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். குறிப்பாக, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிசெய்வேன் உள்ளிட்டவாக்குறுதிகளை தந்தார். இவ்வாறு பொய்யான வாக்குறுதியளித்து ஆட்சி அதிகாரத்தை மோடியின் பாஜக கைப்பற்றியது. ஆனால் சொன்னது எதுவும் நிறைவேற்றாதது மட்டுமல்ல, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த இந்த கொங்கு மாவட்டங்களின் சிறு குறு தொழில்கள், பின்னலாடை, ஜவுளி என அனைத்துதொழில்களையும் சீரழித்து உள்ளார். இதனால் தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் கடும்நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
கருப்பு பணத்தை கைப்பற்றிபொதுமக்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவதாய் சொன்னவர் செல்லாத நோட்டு அறிவிப்பு கொடுத்து கார்ப்பரேட்டுகளின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதோடு, சொந்த பணத்தை வைத்திருந்த அப்பாவி மக்கள் அதனை மாற்ற வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்கவைத்து வேதனையடையச் செய்தவர் மோடி. பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றிய மோடியின் மோசடித்தனத்திற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். அதேசமயம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் கல்விக்காக வாங்கியவங்கி கடன்கள் ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் ராகுல்காந்தி ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் உத்தரவாதம் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார். இங்கே நாங்கள் முன்வைக்கிற வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியமானது என்பதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கிறோம். பொய்யை சொல்லி அதிகாரத்தை பிடித்த மோடி வகையாறக்களை விரட்டியடிப்போம். மக்கள் நலனை முன்னிருத்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசிற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில், திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் நாச்சிமுத்து, சேதுராமன், வே.நா.உதயகுமார், நந்தகுமார், ராஜேஷ்வரி, காங்கிரஸ் கட்சியின் சிவிசி குருசாமி, ராமநாகராஜ், வீனஸ் மணி, மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, லூயிஸ், சற்குணம், போ.சு.முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், சிபிஐ வி.எஸ்.சுந்தரம், ரவீந்திரன், ஜெயா, ஆர்.பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தங்கராசு, இ.ஈஸ்வரன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, யு. கே.சிவஞானம், என்.ஜாகீர், மனிதநேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, ஐஜேகே, தி.க, திவிக,தபெதிக, ஆதித்தமிழர் பேரவை, திரவிடர் தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி, விவசாயிகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், அமைப்பின் நிர்வாகிகள் தலைமையேற்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தில் கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.