‘கடந்த 5 வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியும், அவரைச் சுற்றியுள்ள சிலரும் கொடுக்கும் தொந்தரவுகளால் நாங்கள் வெளியில் சொல்ல முடியாதபடி பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம். இந்திய நாட்டு மக்களைப் போல நாங்களும் இந்தத் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’.புதுதில்லியில், பிஎம்ஓ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற 8 மூத்த அதிகாரிகள்தான் மேற்கண்டவாறு தங்கள் உள்ளக் குமுறலை ஒரு சில ஊடக நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். ‘‘ஒருவேளை மோடி மீண்டும் பிரதமராக வந்துவிட்டால் நாங்கள் உடனடியாக வேறு துறைக்கு இடமாறுதல் கேட்டுச் சென்றுவிடுவோம், அல்லது வேலையே போனாலும் பரவாயில்லை என்று விருப்ப ஓய்வில் சென்றுவிடுவோம்’ என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.‘‘நாங்கள் இதற்கு முன்பும் பல பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பணியாற்றியுள்ளோம். அவர்கள் எல்லோருமே எங்களுடைய திறமைக்கும், உழைப்புக்கும் பெரும் மரியாதை கொடுத்து வந்துள்ளார்கள். பல்வேறு பிரச்சனைகளில் எங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டு முடிவெடுப்பார்கள். நாங்கள் வெளிப்படையாக எங்கள் கடமையைஆற்ற முடிந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்குமுன்பு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து நிலைமை மாறிவிட்டது. அவர் வேறெங்கிருந்தோ அறிவுரைகள் பெற்று முடிவுகள் எடுத்துவிட்டு, அதைச் செயல்படுத்துவதற்கு மட்டும் எங்களைக் கட்டாயப்படுத்துவார். அதில் நாங்கள் ஏதாவது கருத்து சொல்ல முயன்றாலோ, நடைமுறை சிரமத்தைத் தெரிவித்தாலோ, அதை பிரதமர் விரும்பவில்லை என்பதை அவரது சிவந்த முகம் எடுத்துக் காட்டும். கடந்த 5 வருடங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத பல விஷயங்களை வேறு வழியின்றி செயல்படுத்தி வந்துள்ளோம்’ என்று அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் தங்களைச் சந்தித்த மீடியா நண்பர்களிடம் கொட்டித் தீர்த்துள்ளனர்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் விமான பேர ஒப்பந்தம் குறித்து, பாதுகாப்புத் துறையின் பரிந்துரைகளை யெல்லாம் அப்பட்டமாகப் புறக்கணித்துவிட்டு, பிரதமர் அலுவலகமே நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதுதொடர்பான ஆவணங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தாங்கள் எவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் பேச ஆரம்பித்திருப்பதும் புதுதில்லி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மோடி அரசைப் பொறுத்தவரையிலும், கூட்டுத் தலைமை, ஒருமித்த செயல்பாடு என்றெல்லாம் எதுவுமே ஆரம்பத்திலிருந்தே கிடையாது. இது பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சங்சய் மாயுக்கிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘இதெல்லாம்பெரிய இடத்து சமாச்சாரம்’ என்று வேகமாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.மோடி ஆட்சியின் ஐந்தாண்டு கால வேதனையில் மக்களுக்கு மட்டுமல்ல, மூத்த அரசு அதிகாரிகளுக்கும் பல கசப்பான அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன என்பதும், எல்லோருமே மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதும் நன்கு தெரிகிறது.
க.மன்னன்(செய்தி ஆதாரம்: டெக்கான் கிரானிகல் 11.04.2019).