election-2019

மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்தார்: போபாலில் போட்டி?

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2006 செப்டம்பர் 8-ல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதி அருகே வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார். தனது 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா இந்துத்துவா ஆதரவாளர். மாலேகான் வெடிகுண்டு வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார். இந்தநிலையில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போபாலில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிக் விஜய் சிங்கை எதிர்கொள்ளும் வகையில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரக்யா சிங் தாகூர் இன்று போபால் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்று முறைப்படி அக்கட்சியில் இணைந்துள்ளார்.