election-2019

img

அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை

மேலும் சில அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை


மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் எல்லாம் மோடி அரசால் திவால் ஆக்கப்பட்ட கொடுமைகள்..

1. மத்தியக் கண்காணிப்புத் துறை (CVC): சிபிஐ க்கும் மேலான இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.வி சவுத்ரி என்கிற இன்னொரு மெகா ஊழல் பேர்வழி. இவரும் மோடி அரசுக்கு மிகவும் நம்பிக்கையாளர். இவர் ஏற்கனவே பெரும் ‘புகழ்’ பெற்ற நீரா ரேடியா டேப்கள் மற்றும் மொயின் குரேஷி வழக்குகளில் தொடர்புடைவர். அந்த வகையில் இவர் இந்த உயர்பதவியில் அமர்த்தப்பட்டவுடன் ராம்ஜேத் மலானி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அவரது நியமனத்தைக் கண்டித்தது குறிப்பிடத் தக்கது.

2.மத்திய தகவல் ஆணையம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (UPA) முக்கிய சாதனைகளில் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம். அரசின் கடமை தவறல்கள் மற்றும் அரசு மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் ஊழல்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் உரிமையை மக்களுக்கு இச்சட்டம் வழங்கியது. இந்த வகையில் அரசுத் தலையீடு இல்லாமல் இந்நிறுவனம் இயங்க வேண்டி இந்த நிறுவனத்தின் மத்திய மாநிலத் தலைவர்களுக்கு அyந்தாண்டுப் பதவி உறுதி அளிக்கப்பட்டிருந்ததை அச் சட்டத்தின் 13,16,27 ஆகிய பிரிவுகளைத் திருத்தியதன் மூலம் மோடி அரசு தன் கையில் சுருட்டிக் கொண்டது.

மற்ற அரசு ஊழியர்களைப் போலவே அவர்களைத் தண்டிப்பது உட்பட அவர்கள் ஊதியம் மற்றும் உரிமைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் கையில் எடுத்துகொண்டது (பார்க்க: Nidhi Sharma, Govt Seeks Control of Info Commissioners Salaries etc, Economic Times, July 17, 2018). இப்படியாக மக்களின் தகவல் அறியும் உரிமை இப்போது அரசின் கைக்குள் அடங்கிவிட்டது.

3. தேர்தல் ஆணையம் (Election Commission): தனது இறையாண்மைய்ல் மோடி அரசின் தலையீட்டைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்த அமைப்பாக இது செயல்பட்டுவருகிறது. இரண்டு விடயங்கள் மட்டும் இங்கே. 2017 குஜராத் தேர்தலை மோடி அங்கு வந்து பல்வேறு நலத் திட்டங்களை அறிவிப்பதற்காகவே ஒத்தி வைத்தது ஒன்று. மற்றது ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேர்களை லாபம் தரும் பதவியில் இருந்தார்கள் என அவர்களது தேர்தல் வெற்றியை ரத்து செய்து மோடி அரசுக்குப் பணிவு காட்டிய செயல். இதனை உச்சநீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது (மார்ச் 23, 2018).

4 உச்சநீதிமன்றம்: இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நேர்ந்திராத இரு நிகழ்வுகள் தம் ஆட்சியில் நிகழ்ந்துள்ளன என மோடி அரசு சொல்லிக் கொள்ளலாம். தலைமை நீதிபதி ஒருவர் மீது இதுவரை பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கப் பட்டதில்லை. முதல் முதல் அந்தப் பெருமையைப் பெற்றவர் தீபக் மிஸ்ரா.

அடுத்து ஆக மூத்த நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்திய உயர் நீதித்துறை அழுகி நாற்றமடித்துக் கிடப்பதைச் சொல்லியழ வேண்டிய நிர்ப்பந்தத்தை மோடி அரசு ஏற்படுத்தியது. சொல்லி அழுதவர்கள் மூத்த நீதிபதிகள் மட்டுமல்ல தம் நீதித்துறை வாழ்வில் அப்பழுக்கற்றவர்களாகப் பெயர் பெற்றவர்கள். மூத்த நீதியரசர் செலமேஸ்வர், தற்போது தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய், நீதியரசர் மதன் பி. லோகூர், சமீபத்தில் பதவி ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் இவர்கள் நால்வரும் உச்சநீதிமன்ற அமர்வுகளில் யாரை நியமிப்பது என்கிற அதிகாரத்தைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறாகப் பயன் படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டை மக்கள் முன் வைத்தனர்.

இதுவும் ஏதோ தலைமை நீதிபதிக்கும் பிற சீனியர் நீதிபதிகளுக்கும் இடையே நடந்த உரசல் மட்டுமல்ல. எம்மாதிரி வழக்குகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்பது வெளிப்பட்ட போதுதான் மோடி அரசு உலகோர் முன் தலை குனிய நேர்ந்தது. அரசுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு எழுத நேர்மையான மூத்த நீதிபதிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுதான் அது. மாற்றாக சொன்னதை ஏற்றுக் கொள்ளும் ஜூனியர் நீதிபதிகளையே மிஸ்ரா அமர்த்திக் கொள்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டின் முக்கிய அம்சம்.

“இந்த நிறுவனம் காக்கப்படாவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்காது” என்றும் அவர்கள் கூறினர்.

இந்த அடிப்படையில் எதிர்க் கட்சிகள் சென்ற ஏப்ரல் 2018ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானம் (impeachment) கொண்டுவர முயன்றபோது அவர்கள் சுட்டிக்காட்டிய ஐந்து வழக்குகளில் ஒன்று ஷொராபுதீன், அவர் மனைவி கௌசர் பீவி மற்றும் உதவியாளர் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பி.எச்.லோயா அவர்களின் மர்மமான மரணம் பற்றியது. இப்போதைய பா.ஜகவின் தலைவரான அமித்ஷா குஜராத்தில் நரேந்திரமோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது அவரது ஆணையின் பேரில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் படுகொலை அது.

இப்படிச் சுயலாப நோக்கங்களுக்காக சட்ட அடிப்படையிலான அரசு அமைப்புகள் ஊழல்மயமாக்கப்பட்டு குட்டிச்சுவராக்கப்படுவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் திட்டமிட்டு அரசியல் சாசசன அமைப்புகளை ஒழித்துக் கட்டுவது என்பதுதான் இந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசின் படா சாதனையாக அமைகிறது.

(தொடரும்)

-Marx Anthonisamy