election-2019

img

தலித் தலைவரும் குஜராத் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானியுடன் நேர்காணல்


image.png

 

உனா சம்பவம் நடந்திருக்கவில்லை என்றால் ஜிக்னேஷ் மேவானி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார் என்று சொல்வது சரியானதாகவே இருக்கும். மாட்டின் தோலை உரித்ததற்காக 2016 ஜூலை குஜராத்தில் உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். தங்களைத் தாக்கியவர்களிடம் குஜராத்தில் உள்ள மோட்டா சமாதியாலாவில் வசித்து வந்த வஸ்ரம் சர்வய்யா, அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் அவர்களுடைய உறவினர்களான அசோக் மற்றும் பெச்சார் என்று அந்த நான்கு தலித் இளைஞர்களும் இறந்து போன மாடு ஒன்றின் தோலையே தாங்கள் உரித்ததாகக் கூறி கெஞ்சினர். ஆனாலும் பயனில்லை. ஒரு ஜீப்பில் கட்டி வைத்து, பொதுமக்கள் பார்வையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

உனாவில் நடந்த இந்த தாக்குதல் குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள தலித்துகளிடம் மட்டுமல்லாது, மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களிலும் பரந்த அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. குஜராத்தில் அகமதாபாத்தில் இருந்து துவங்கி, 300க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து உனாவிற்கு செல்லும் வகையில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் தலித்துகளின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைக் கோரி பேரணி நடத்தப்பட்டது. 10 நாட்கள் நடைபெற்ற அந்தப் பேரணி 2016 சுதந்திர தினத்தன்று உனாவைச் சென்றடைந்தது. இந்த வலுவான பதிலடியின் மூலமாக, அதற்குப் பிறகு தலித்துகள் மீது மிகப் பெரிய அளவில் படுகொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற வகையில் எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மிக விரைவிலேயே மோடிக்கெதிரான மிக முக்கியமான குரலாக மேவானி மாறினார். தற்போது குஜராத் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் பாசிசம், சாதியவாதம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு எதிராக தனது குரலை ஓங்கி எழுப்பி வருகிறார். தற்போது நடைபெறவிருக்கும் இந்த பொதுத் தேர்தலை இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்றே அவர் வலியுறுத்தி வருகிறார்.

 

மேவானியின் நேர்காணலின் ஒரு பகுதி

 

தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் குறித்த மோடி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலச் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கான மிக எளிமையான, நேர்மையான பதிலை உங்களுக்கு நான் தருகிறேன். இந்த ஐந்து ஆண்டுகள் மிகவும் பேரழிவு கொண்டதாக, அடக்குமுறை மிகுந்த காலமாக, மிகுந்த வலியை ஏற்படுத்துகின்ற வகையில் பயங்கரமானதாகவே இருந்திருக்கிறது.

இந்த அரசாங்கத்தைப் பற்றியும் அதன் சர்வாதிகார போக்குகளைப் பற்றியும் உங்களைப் போன்றோர் பலரும் இவ்வாறாகவே கூறி வருகிறீர்கள். பயங்கரமானது என்று ஏன் அதைக் கூறுகிறீர்கள்?

ஆர்எஸ்எஸ் தன்னுடைய ஆதரவாளர்களை முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விட்டது என்பதாலேயே அதை மிகவும் பயங்கரமானது என்று கூறுகிறோம். அவர்கள் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் குரலை நசுக்கி அவர்களை மௌனமாக்க முயன்று வருகிறார்கள். உண்மையில் இந்தியா குறித்ததாக அவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் அனைவராலும் எதிர்க்கப்படுகிறது. பிராமணிய ஆதிக்கத்தை அவர்கள் திணிக்க விரும்புகிறார்கள். இன்னும் ஆழமாகப் பார்த்தால், அவர்கள் இன்னமும் மனுஸ்மிருதியைக் கடைப்பிடிப்பதாக சத்தியம் செய்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

ஆனால் உனாவில் நீங்கள் மேற்கொண்ட நீண்ட பேரணியானது இந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது அல்லவா? 

ஆம். அதிகாரத்தைப் பெறுவது, உரிமைப்பாடு குறித்த உணர்வுகள் எழுந்திருக்கின்றன. பாதுகாப்பு குறித்த உணர்வுகளும் எழுந்திருக்கின்றன என்றாலும் இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கின்றது. உனாவிற்குப் பின்னரும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உனா சம்பவத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இல்லா விட்டலும் சுற்றி வளைத்து வருத்தத்தை வெளிப்படுத்தினார். அது தலித் சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவியதா?

அவரது வருத்தம் மிகவும் தாமதமாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அவரது பேச்சுக்குப் பிறகு ஒரு நிம்மதியான உணர்வு இருந்தது. ஏனெனில் இது ஒரேயொரு முறை மட்டுமே நடக்கின்ற போராட்டமாகவோ அல்லது ஒரேயொரு முறை நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகவோ இருக்கவில்லை. பலமுனைகளில் இருந்தும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அத்தகைய தாக்குதல்களையெல்லாம் ஒரு உனா பேரணி மட்டுமே தடுத்து நிறுத்துவதாக இருக்கப் போவதில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில், தலித் சமூகம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன. தலித்துகளுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்துவதற்கான தைரியம் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தலித் ஆண்கள் யாரும் படுகொலை செய்யப்படவில்லை என்றாலும் பிற வகையான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, தலித்துகள் சில இடங்களில் குதிரையிலேறிச் செல்ல முடியாது, சில இடங்களில் மீசை வளர்க்க முடியாது. சில இடங்களில் அவர்களுடைய திருமண ஊர்வலம் மேல் சாதித் தெருக்கள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் தலித் சமூகத்தை ஒடுக்குவது என்று கூறுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

உனா சம்பவம் பெரும்பாலான மக்கள் கவனத்திற்கு வந்த போதிலும், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் மீது நடத்தப்பட்ட ஒரேயொரு தாக்குதலாக அது மட்டுமே இருக்கவில்லை. ராஜ்கோட்டில் தலித் ஒருவர் அடித்தே சாகடிக்கப்பட்ட போது, செய்தி ஊடகங்கள் எதுவும் பேசாது அமைதி காத்தே நின்றன.

இவர்களின் அடக்குமுறைக்கான ஆதாரமாக தலித்துகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் மட்டுமே இருக்கவில்லை. ஆதிவாசிகளுக்கு ஆதரவாக அல்லது அரசாங்கத்திற்கு எதிராக, கொடூரமான முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக நிற்கின்ற மனித உரிமை ஆர்வலர்களும்கூட இவர்களால் கைது செய்யப்படுகிறார்கள்.

தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் அல்லது செயற்பாட்டாளர்களின் கைதுகள் போன்றவை அரசாங்கத்தின் தோல்வியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இவர்கள் செய்யும் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. வேலை வாய்ப்புகள் குறித்து ஆரவாரமான வாக்குறுதிகளை பிரதமர் அளித்த போதிலும், வேலைகள் உருவாக்கப்படவில்லை. கடந்த 45 வருடங்களைக் காட்டிலும் மிக அதிகமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. செயற்பாட்டாளர்களின் கைது என்பது பொதுமக்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடையே பயத்தை உண்டாக்கும் நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். அறிவிக்கப்படாத நெருக்கடிநிலைக் காலம் ஒன்றிலேயே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதைக் காணும் போதும், பீமா கோரேகானைப் பற்றி உரத்த குரல்கள் எழுப்பப்படும் போதும், இந்த ஆளும் கட்சியானது ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லீம்கள் ஆகியோருக்கு எதிரான சித்தாந்தங்களைத் தன்னிடம் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும், ஆதிவாசிகளின் கலாச்சாரத்தை அழிக்கின்ற வகையில் செயல்படுகின்ற பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் தங்களுடைய குரலை எழுப்புவதாலேயே இந்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். 1925ஆம் ஆண்டு முதலாகவே பாஜக மற்றும் அதன் முன்னோடிகள் தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கின்ற தீய செயல்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த கைது மற்றும் ஒடுக்குதல்கள் போன்ற நிகழ்வுகள் இருக்கின்றன. ஜுனாய்த் அல்லது அக்லாக்கை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரும் இன்றைக்கு சுதந்திரமாக வெளியே சுற்றி வருகிறார்கள் என்றால், அது அவர்களுடைய அரசியல் எஜமானர்களாலேயே சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது நடக்கிறது. நான் ஏற்கனவே சொன்ன பயம் குறித்ததாகவே அது இருக்கிறது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதை தேர்தல்கள் மூலமாக வாக்காளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த தீய சக்திகள் அரசியல் அதிகாரத்திலிருந்து அகற்றப்படும் போது, உள்ளுர ஊடுருவியிருக்கின்ற விஷத்தை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் சமூக மட்டத்தில் வேலை செய்து மேற்கொள்ள வேண்டும்.

நம் முன்பாக இருக்கின்ற வழி என்ன? பாஜக அல்லது மோடியை நாம் அகற்ற வேண்டுமா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக மனுவாலும், சுதந்திரம் அடைவதற்கு முன்னர் கோல்வால்கராலும் கற்றுக் கொடுக்கப்பட்ட பிராமணிய, சாதிய, பாசிசத் தன்மைகளைக் கொண்டதாக பாஜகவின் செயல்பாடுகள் இருப்பதால் இரண்டையுமே நாம் அகற்ற வேண்டும்., ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகளே தற்போதைய ஆளும் அரசியல் தலைவர்களை வளர்த்தெடுத்துள்ளன. பாஜகவை அகற்றிவிட்டு, "மோடி வேண்டாம், அமித் ஷா வேண்டாம்" என்று நாம் சொல்ல வேண்டும்.

செய்வதை விட சொல்வது மிக எளிதாகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. கூட்டணி ஏற்படுத்துவதில் காங்கிரஸும் குளறுபடிகளையே செய்திருக்கிறது.

நான் ஒப்புக் கொள்கிறேன். கிரிக்கெட் வார்த்தைகளில் சொல்வதானால், பாசிச ஆர்எஸ்எஸ்சின் மோடி, அமித்ஷாவை எதிர்கொள்வது என்பது வெற்றி பெறுவதற்காக வாசிம் அக்ரமின் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையைப் போன்றதாகும். இது மிகக் கடினம் என்றாலும், அதற்கான சாத்தியம் இருக்கவே செய்கிறது. அதை எப்படியாவது செய்தே ஆக வேண்டும். ஒரு செயற்பாட்டாளராக மோடிக்கு எதிராக என்னுடைய குரலை உயர்த்தியிருக்கிறேன். நமது குரல்களைக் கேட்க விடாது பலத்த ஓசையை எழுப்புகின்றவர்களை அனுமதிக்காது, நம்முடைய குரல் அனைவருக்கும் கேட்குமாறு நாம் செய்ய வேண்டும். 


புல்வாமா இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அதை நாம் இல்லை என்று சொல்லி விட முடியாது. புல்வாமாவுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒரு வலுவான நிலையில் இருந்தன. புல்வாமா குறித்து பாஜகவினரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகளை சிலர் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலைகளில், நாம் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யும் என்பதால், நாமும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளத்தான் வேண்டும். டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஒன்றாக இணையுமேயானால், மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கருடன், உத்தரப்பிரதேசத்தில் மகா கூட்டணியுடன் சில புரிதல்கள் இருக்குமேயானால் முடிவுகள் வேறு மாதிரியாகவே இருக்கும். இது ஒரு வழக்கமான தேர்தல் அல்ல என்பதால் நாம் இதற்கான முயற்சிகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். நாட்டின் ஆன்மாவிற்கு, நாடு கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு, நம்முடைய அரசியலமைப்பின் நோக்கங்களப் பாதுகாப்பதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்கும் என்று கருதியதால், கடந்த ஓராண்டு காலமாகவே நான் இவ்வாறான பிரச்சாரத்தையே செய்து வருகிறேன்.

 

நன்றி https://frontline.thehindu.com/cover-story/article26641624.ece?homepage=true

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்

;