election-2019

img

கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்த மோடி அரசு

புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். பேஷ்வா அரசை எதிர்த்து தலித் படை ஒன்று வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாஓயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி சென்ற ஜூன் 2018ல் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் கைதைக் கண்டித்த செயல்பாட்டாளர்களான வழக்குரைஞரும் பி/.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா. தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் ஆக 28, 2018 அன்று சோதனை இடப்பட்டது. இவர்களில் சிலரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலானோர் கொடும் தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுவதை உலகளவில் அறிவுஜீவிகள் கண்டித்தனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃப்ரெய்ரா, வரவரராவ் ஆகிய ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தகர்த்து அவர்களை உடன் விடுதலை செய்யச் சொல்லி உலக அளவில் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரொமிலாதாபர் மற்றும் பொருளியல் வல்லுனர் பேரா பிரபாதப் பட்நாயக், மூத்த பொருளியல் அறிஞர் தேவகி ஜெயின், காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மூத்த ஆலோசகர் மாஜா தாருவாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை சென்ற செப்டம்பர் 2018ல்தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்ல மகாராஷ்டிர காவல்துறை இதை விசாரணை செய்தால் இவ்வழக்கில் நீதி கிடைக்காது என்பதால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்கிற இவ் அறிஞர்களின் கோரிக்கையையும் அது தூக்கி எறிந்தது.

எனினும் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட இரு பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பிற்கு மாறாக நீதியரசர் சந்திர சூட் முன்வைத்த மாறுபட்ட கருத்துக்கள் பா.ஜ.க அரசும் அவர்களின் காவல்துறையும் எத்தனை வன்மமாக கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கையாளுகின்றனர் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. அவரது தீர்ப்பின் ஒரு சில அம்சங்கள் மட்டும் இங்கே:

1. இந்த நீதிமன்றம் சென்றஆக 29 அன்று மகாராஷ்டிர அரசு மற்றும் இதர பிரதிவாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவெடுத்த அடுத்த சில மணி நேரங்களில் புனே காவல்துறை இணை ஆணையர் ஷிவார்ஜிராவ் ஓத்கே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஐவரையும் புனே கொண்டு செல்லக் கூடாது எனவும் இவர்கள் தத்தம் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் யாரைச் சொன்னதோ அவர்கள் ஐவர் மீதும் மேலும் அதிகமான குற்றங்கள் செய்துள்ளதற்கான சான்றுகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார். இவரது இந்தச் செயல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. நீதிமன்றம் அன்று இட்ட ஆணைக்குப் பதிலளிக்கும் முகமாக எலக்ட்ரானிக் ஊடகத்தை இப்படிப் பயன்படுத்தியுள்ளார் இந்த ஜாயின்ட் கமிஷனர்.

2. வழக்கு தொடர்பான இப்படியான சர்ச்சைக்குரிய தகவல்களை இந்த ஜாயின்ட் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடுநிலையான விசாரணை என்பது இதன் மூலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணை நடந்து கொண்டுள்ளபோதே பொதுக் கருத்தில் இப்படியான ஐயங்களை விதைப்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரியாதையைக் குறைக்கும் வண்ணம் கருத்தை உருவாக்குவது என்பதெல்லாம் விசாரணையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்றத்தை உறுதி செய்வதோ தீர்ப்பளிப்பதோ போலீசின் வேலையல்ல. துரதிர்ஷ்டவசமாக இப்படியான நடவடிக்கை (நீதிமன்ற விசாரணைக்கு அப்பால்) ஒரு மீடியா விசாரணைக்கு (media trial) இன்று வழிவகுத்துள்ளது

.3. இந்த நீதிமன்றம் சென்றஆக 29 அன்று மகாராஷ்டிர அரசு மற்றும் இதர பிரதிவாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவெடுத்த அடுத்த சில மணி நேரங்களில் புனே காவல்துறை இணை ஆணையர் ஷிவார்ஜிராவ் ஓத்கே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஐவரையும் புனே கொண்டு செல்லக் கூடாது எனவும் இவர்கள் தத்தம் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் யாரைச் சொன்னதோ அவர்கள் ஐவர் மீதும் மேலும் அதிகமான குற்றங்கள் செய்துள்ளதற்கான சான்றுகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார். இவரது இந்தச் செயல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. நீதிமன்றம் அன்று இட்ட ஆணைக்குப் பதிலளிக்கும் முகமாக எலக்ட்ரானிக் ஊடகத்தை இப்படிப் பயன்படுத்தியுள்ளார் இந்த ஜாயின்ட் கமிஷனர்.

4. வழக்கு தொடர்பான இப்படியான சர்ச்சைக்குரிய தகவல்களை இந்த ஜாயின்ட் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடுநிலையான விசாரணை என்பது இதன் மூலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணை நடந்து கொண்டுள்ளபோதே பொதுக் கருத்தில் இப்படியான ஐயங்களை விதைப்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரியாதையைக் குறைக்கும் வண்ணம் கருத்தை உருவாக்குவது என்பதெல்லாம் விசாரணையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்றத்தை உறுதி செய்வதோ தீர்ப்பளிப்பதோ போலீசின் வேலையல்ல. துரதிர்ஷ்டவசமாக இப்படியான நடவடிக்கை (நீதிமன்ற விசாரணைக்கு அப்பால்) ஒரு மீடியா விசாரணைக்கு (media trial) இன்று வழிவகுத்துள்ளது.

5.சுதா பாரத்வாஜ் தோழர் பிரகாஷுக்கு எழுதிய கடிதம் என ஒன்று மீடியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்துக் காத்திரமான பல கேள்விகள் உள்ளன. தேதியில்லாத கடிதம் அது. ஈமெயில் தலைப்பு விவரமும் அதில் இல்லை. இந்தக் கடிதம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்கிற கருத்துடன் ஒரு அறிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. யாரோ மராத்தி மொழியை விவரமாகப் பேசக் கூடிய ஒருவர் இட்டுக்கட்டிச் செய்த வேலைதான் இக்கடிதம் என அது கூறுகிறது. இக்கடிதத்தில் 17 இடங்களில் தேவநாகிரி எழுத்துக்களில் சொற்கள் எழுதப்பட்டுள்ளன. சுதா பாரத்வாஜ் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அல்ல. மராத்தி பேசுபவரும் அல்ல. மராத்தி மொழி இலக்கண விதிகளுக்கிணங்க தேவநாகிரி எழுத்துக்களில் அவர் எழுதியிருப்பதற்கு வாய்ப்பில்லை.

5. CrPC 41 B யின்படி ஒருவரைக் கைது செய்யும்பொது அதற்கு சாட்சியாக நிறுத்தப்படுபவர் ஒரு சுதந்திரமான நபராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு காட்டப்படும் இரு சாட்சிகளும் புனேயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். புனே முனிசிபல் கார்பொரேஷனில் பணி செய்பவர்கள்.

6. நீதியின் மேல் உள்ள பற்றின் அடிப்படையிலும், புலனாய்வு செய்யப்படும் விதத்தில் தீவிரமான ஐயங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்தப் புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வு முகமை அல்லது குழுவிடம் ஒப்படைபது அவசியம் எனக் கருதுகிறேன். அப்போதுதான் இவ்வழக்கில் எவ்வித் சமரசத்தும் ஆட்படாது நீதி கிடைக்கும்.

7. ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியுள்ள இம்மனுதாரர்கள் யாரோ முகவரி அற்றவர்கள் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகவோ, அவசியல் காரணங்களுக்காகவோ இவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள் என யாரும் சொல்ல இயலாது.

8. இவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அவர்களின் கண்ணியத்தைப் பாதித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இதனை எந்த இழப்பீடும் ஈடுசெய்துவிட இயலாது. இந்தப் புலனாய்வு பொருளற்றுப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஒரு சிறப்புப் புலனாய்வும் குழுவிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து.

(தொடரும்)

Marx Anthonisamy


;