education

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு... ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: 
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்குப் பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதிர் கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அறிமுகத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இதற்குத் தீர்வு காணும் வகையில்,  அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று,  நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு பரிசீலிக்க உள்ளதாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அது தொடர்பான பரிந்துரைகளைத் தமிழக அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி  பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜோதி முருகன், கோவை நல்லா. ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராக உள்ளனர்.இந்த ஆணையம் ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.