education

img

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 18 முதல் 26 ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததாலும், சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் கால அவகாசம் போதுமானதாக இல்லை என காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழக அரசு கால நீட்டிப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு இதுவரையில் 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி 2 நாட்களில் அதிகளவில் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.