economics

img

மோசடியால் தினசரி ரூ.100 கோடி இழப்பு - ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

வங்கி முறைகேடு அல்லது மோசடிகளால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ.100 கோடியை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 7 ஆண்டுகளில் வங்கி முறைகேடு அல்லது மோசடிகள் மூலமாக இந்தியா தினசரி குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயினை இழந்துள்ளதாகவும், இந்தியாவின் மிகப்பெரிய நிதியினை கொண்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 50 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த 5 மாநிலங்கள் மட்டும் மொத்த மோசடி விகிதத்தில் 83 சதவிகித பங்கு வகித்துள்ளதாகவும், இதன் மதிப்பு 2 லட்சம் கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகின்றது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி, கடந்த 1.4.2015 முதல் 31.12.2021 வரையில் வங்கி மோசடிகளால் 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடிகளானது 8 வகையில் நடைபெறுவதாகவும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. 

இதில் வங்கிக் கணக்கினை தவறாகப் பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி போலி ஆவணங்கள் கொடுத்து பணம் பெறுதல், கணக்குகளில் திருத்தம், சொத்து பரிமாற்றத்தில் மோசடி, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் முறைகேடு, ஏமாற்றுதல் போன்ற பல வகையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி தரவின் படி கடந்த 2015 - 2016ல் 67,760 கோடி ரூபாயாக இருந்த மோசடிகளின் அளவு, 2016 - 2017ல் 59,966.4 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2019 - 2020 இந்த மோசடி விகிதமானது 27,698.4 கோடி ரூபாயாகவும், 2020 - 2021ல் 10,699.9 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 647.9 கோடி ரூபாயாகவும் உள்ளது. 

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில்  கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.