tamilnadu

img

நிதி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி. மார்ச் 20- கள்ளக்குறிச்சி அருகே கிராமப்புறங்களை குறிவைத்து கடன் வாங்கித் தருவதாகk கூறி ஏழை மக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சங்கராபுரம் வட்டம் கண்டலை கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் காவல்துறையினர் துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து மோசடி நபர்களை தேடி வந்தனர். இதில் திருவாரூர் மாவட்டம் அன்னக்கொடி அக்ரகாரம் தெருவைச் சேர்ந்த வேதகிரி (36), மற்றும் தஞ்சாவூர் வடக்கு  வாசல் நாடார்ரோடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஷ் (36) ஆகிய 2 பேரும் இப்படி நிதி நிறுவனம் நடத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் நீலமங்கலம் கூட்ரோடு பகுதியில் எஸ்.பி. மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் சுமார் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. எளிய முறையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் கொடுக்க வேண்டும் என்று வசூல் செய்து கணிசமான தொகை சேர்ந்தவுடன் தலைமறைவாகி விடுவது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இப்படி அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.