economics

img

கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியா...?  4 மாதங்கள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம்...

மார்ச் மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 14.55 சதவிகிதமாக உள்ளது. 

திங்களன்று ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் 2021 முதல் தொடர்ந்து 12வது மாதமாக இரட்டை இலக்கில் உள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 2021-ல் மொத்த விலை பணவீக்கம் 14.87 சதவிகிதமாக இருந்தது. தற்போது மார்ச் மாதத்தில் 14.55 சதவிகிதமாக உள்ளது. 

பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு 13.11 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது 7.89 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022-ல் உணவுப் பொருட்களின் பணவீக்கம் பிப்ரவரியில் 8.19 சதவிகிதத்திலிருந்து 8.06 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

பிப்ரவரியில் 26.93 சதவிகிதமாக இருந்த காய்கறி பணவீக்கம் 19.88 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆயினும் கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள் பிற இறக்குமதி வர்த்தகப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மொத்த விலை பணவீக்கம் 14.55 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா போர் மூலம் ஏற்பட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புக் காரணமாக, மார்ச் 2022-ல் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள், அடிப்படை லோகங்கள் போன்றவற்றின் விலைகள் உயர்வதன் வாயிலாக மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது என ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் மார்ச் மாதத்தில் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 10.71 சதவிகிதமாகவும், எரிபொருள் மீதான பணவீக்கம் 34.52 சதவிகிதமாகவும், பெட்ரோலியம் பொருட்கள் மீதான பணவீக்கம் 83.56 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ரீடைல் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.