economics

img

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியிலும் கை வைக்கிறது மோடி அரசு..? இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டியை குறைக்க திட்டம்...

புதுதில்லி:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததுமுதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டிலும் இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இபிஎப்ஓ மத்திய அறங்காவலர்கள் குழு (Central Board of Trustees - CBT) கூட்டம், மார்ச் 4 அன்று ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோடி அரசுவெளியிடும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2012 - 2013 நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 8.50 சதவிகிதமும், 2013- 2014 நிதியாண்டில் 8.75 சதவிகிதமும், 2014 - 2015 நிதியாண்டில் 8.75 சதவிகிதமும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த ஆண்டிலும்கூட 2015 - 2016 நிதியாண்டில் 8.80 சதவிகிதமும் வட்டி வழங்கப்பட்டது. 

ஆனால், அதன்பின்னர் 2016 - 2017 நிதியாண்டில் 8.65 சதவிகிதம் என ஒரேயடியாக 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன. 2017 - 2018 நிதியாண்டில் மேலும் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.55 சதவிகிதத்திற்கு தள்ளப்பட்டது. 2018 - 2019 நிதியாண்டில் 10 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 8.65 சதவிகிதம் என்று வட்டி வகிதம் மாற்றியமைக்கப்பட்டாலும், 2019 - 2020 நிதியாண்டில் 15 புள்ளிகள் குறைக்கப்பட்டன. 8.50 சதவிகிதமே தற்போது வட்டி நிர்ணயம் உள்ளது. இந்த வட்டியும் கூட இன்னும் முழுமையாக வந்துசேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில்தான், 2020-21 நிதியாண்டிற்கான இபிஎப்ஓ வட்டி விகிதமும் பெரிய அளவிற்கு குறைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கொரோனா நெருக்கடியின் போது,இபிஎப்ஓ சேமிப்பிலிருந்து மக்கள் பெரும் தொகையை எடுத்துள்ளனர். சொல்லப்போனால், மத்திய நிதித்துறையே இதனை ஊக்கப்படுத்தி, பணத்தை எடுக்க வைத்தது. மறுபுறத்தில், கொரோனா பொதுமுடக்கம் - வேலையின்மையால் இபிஎப்ஓ நிதிக்கான பங்களிப்பும் கணிசமாக குறைந்தது. ஆனால், இதனையே சாக்காக வைத்து வட்டி விகிதங்களை குறைக்க, மத்திய பாஜக அரசு தற்போது முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஏற்படா
விட்டாலும், வட்டி குறைப்புக்குத்தான் மோடி அரசு முயற்சிக்கும். என்றாலும், தற்போது அதற்கு கொரோனா ஒரு காரணமாக கிடைத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.