economics

img

2% உயர்த்தப்பட்ட விமான எரிபொருள் விலை..!

சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல், விமானங்களை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என  மாதத்தில் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை  ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை ஈட்டும் ஜெட் எரிபொருள், இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விமான எரிபொருள் டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 2,258.54 அல்லது 2 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ 1,12,924.83-ஆக உள்ளது என்று அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அதன்படி ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைபெற்ற ஏழு விலை உயர்வுகளில், எரிபொருள்களின் விலைகள் கிலோ லிட்டருக்கு ரூ. 38,902.92 அல்லது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.