districts

img

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கல் அன்று திறப்பு: அமைச்சர்

செங்கல்பட்டு, அக்.13- செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரும் பொங்கல் பண்டிகையின் போது திறக்கப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். வியாழனன்று (அக்.13) கட்டுமான பணிகளை அவரும் ஊரக தொழில்துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசனும் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கிளாம்பாக்கத்தில் புதிய  பேருந்து நிலையம் 88.52 ஏக்கர் நிலப்பரப் பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் செயல்பட தொடங்கிய உடன் சென்னையில் பெருமளவு போக்கு வரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.  பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் பொங்கலுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 2350 பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையமாக அமையவுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைத்திட திட்ட மிடப்பட்டுள்ளது.  இதற்காக தேசிய நெடுஞ் சாலை துறை ஆணையம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து நிலையத்தினை பொது மக்கள் எளிதாக அணுக புதியதாக புறநகர்  ரயில் நிலையம் அமைத்திட திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலர் `ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

;