districts

img

ஊக்கத்தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேலூர். மார்ச் 28 - ஊக்கத்தொகை 500 ரூபாய் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு பலன்  அளித்து வந்த பழைய எஸ்.ஏ.பி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவலம் அடுத்த அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர்  ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் பேசினார். உரவிலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வெட்டு கூலி 600இல் இருந்து  1800 ரூபாயாக உயர்ந்துள்ளது. கூடவே லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால்  உற்பத்தி செலவு அதிகரித்ததால் 60 விழுக்காடு வெட்டு கூலிக்கே போகிறது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக விலையிலும் கொள்முதல் ஊக்கத்தொகையிலும் மாற்றமின்றி வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட சர்க்கரை ஆலையில் 7 லட்சம் டன் அரவை இருந்த நிலையில் தற்போது 2 லட்சம் டன் மட்டுமே அரவை உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக எத்தனால் பிளான்ட் கொண்டு வருவதன் மூலம் லாபம் ஈட்ட முடியும். எனவே ஊக்கத்தொகையையும், கொள்முதல் விலையிலும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.