districts

img

மார்க்சிய போராளியாக மலர்ந்த எளிய பெண்மணி

வேலூர் மாவட்டத்தில் தபால் தந்தி தொழிற் சங்க இயக்கத்திலும் மாதர்சங்க இயக்கத்திலும் படிப்படியாக வளர்ந்து தலைவராக உயர்ந்தவர் தோழர் சாவித்திரி.  வேலூரில் திங்களன்று (ஜன.16) கால மான அவரது தொழிற்சங்க வாழ்க்கை குறித்து மறைந்த எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் மாபெரும் தலைவர் மறைந்த சி.எஸ்.பி குறித்து எழுதியுள்ள “சி.எஸ்.பஞ்சாபகேசன் இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பகுதிகள் வருமாறு: 
வேலூர் தபால் தந்தி இயக்கத்தின் செயல்வீரரான சீனிவாசராவும் அஞ்சல் ஊழியரான ஆர். சாவித்திரியும் ஒருவரோடு ஒருவர் ஈடுபாடு கொண்டு திரு மணம் செய்து கொள்ள விரும்பினர், ஆனால் சீனிவாசராவிற்கு ஒரு உறுத்தல் இருந்தது. 1960ஆம் ஆண்டில் தபால் தந்தி ஊழியர் வேலைநிறுத்தத்தின் பொழுது அதை உடைப்பதற்காக நிர்வாகம் பல புதிய ஊழியர்களை நியமித்தது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சாவித்திரியும் ஒருவர். அப்போது அவருக்கு அரசியல் தெரியாது. நான்கைந்து நாட்களுக்குப்பிறகு வேலை நிறுத்தம் திரும்ப பெற்றவுடன் புதி தாக வேலைக்கு எடுக்கப்பட்ட சாவித்திரி உள்ளிட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறிது காலத்திற்குப் பிறகு சாவித்திரிக்கு மீண்டும் தபால் தந்தி இலாகாவில் வேலை கிடைத்தது. சீனி வாசராவிற்கு ஏற்பட்ட ஐயமெல்லாம் கருங்காலியாக வேலைக்கு சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள லாமா என்பதுதான். அவர் சி.எஸ்.பியை அணுகி என்ன செய்வது என்று கேட்டார். சி.எஸ்.பி (தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன்) சொன்ன பதில்: “அவருக்கு அரசியல் புரியாத, தொழிற்சங்கம் பற்றி தெளிவில்லாத நிலையில் வேலை கிடைத்தால் போதும் என்று வேலைக்கு வந்திருக் கிறார். அவரை திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை. முடிந்தால் திரு மணத்திற்குப்பிறகு அவரை நம் இயக்கத்திற்கு கொண்டுவர முயற்சி செய்” சிஎஸ்பி கூறியதைக் கேட்டதும் சீனி வாசராவ் தெளிவு பெற்றார். இத்திரு மணத்திற்கு சாவித்திரி வீட்டில் எதிர்ப்பு இருந்தது, எனவே சீனிவாசராவ்-சாவித்திரி திருமணம் சி.எஸ்,பி வீட்டி லேயே 1965ஆம் ஆண்டில் எளிமையாக நடைபெற்றது. சி.எஸ்.பியே அதை நடத்தி வைத்தார். சீனிவாசராவ்-சாவித்திரி இல்லற வாழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆனால் 1973 ஆம் ஆண்டில் சீனிவாச ராவ் மூளையில் ஏற்பட்ட கட்டியால் மரண மடைந்தார்.

இது சாவித்திரியை உடலளவிலும் மனதளவிலும் பாதித்தது. சி.எஸ்.பி அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. அவர் துக்கத்தை அடக்கிக்கொண்டு சாவித்திரிக்கு ஆறுதல் கூறி தேற்றினார். சம்மேளனத்தில் பெண்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படாத அக்காலத்தில் அவர் சாவித்திரியை வேலூரில் சம்மேள னத்தின் துணைத்தலைவராக ஆக்கி சங்க வேலைகளில் கவனம் செலுத்தச் செய்தார். சாவித்திரியின் அண்ணன் பிலாய் உருக்காலையில் பணிபுரிந்து வந்தார். அவர் தன் தங்கையை பிலாய்க்கு பணி மாற்றம் செய்து கொண்டு வரும்படி கூறி னார். சாவித்திரி சி.எஸ்.பியை சந்தித்து இந்த தகவலைக் கூறி என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு சி.எஸ்.பி கூறிய பதிலையும், பின் நிகழ்ந்தவற்றையும் சாவித்திரியே கூறுகிறார்: “புதிய இடத்தில், புதிய அலு வலகத்தில் நீ சென்று வேலை செய்வதில் சில சிரமங்கள் இருக்கும். இங்கி ருந்து எங்களுடன் தொழிற்சங்க பணி ஆற்றினால் உனக்கு மன ஆறுதல் கிடைக்கும். எந்த முடிவையும் நீயே எடுக்க வேண்டும்” என்றார்.  “நானும் யோசித்துப் பார்த்து தோழர் சீனிவாசராவ் விட்டுச் சென்ற பணியினை நான் தொடர வேண்டுமென முடிவு செய்தேன். 1988ஆம் ஆண்டில் அவர் நினைவு நாளில் நான் சி.எஸ்.பி அவர்களைச் சந்தித்தேன். நான் முழு நேர கட்சிப்பணி, மாதர் சங்க பொறுப்பை ஏற்க முடிவு செய்திருப்பதாக கூறினேன். அவரும் பாராட்டினார், “இந்த அளவுக்கு எனக்கு மன மாற்றத்தையும், வழிகாட்டுதலையும் சி.எஸ்,பி அவர்கள் என் தந்தை போன்று எனக்கு ஊக்கமளித்தார் என்றால் மிகையாகாது. “அவ்வப்போது நான் செய்யும் வேலையைக் கேட்டறிந்து உற்சாக மூட்டுவார். ‘‘என் மூத்த மகள் நீ’’ என்று என்னிடம் கூறும்போது எனக்கு உற்சாகமும், பெருமையும் ஏற்படும்.

என்னை ஒரு பேச்சாளியாக்க முயற்சித்தார். அவரது பணி ஓய்வு பாராட்டு விழவில் நான் முதன்முதலில் பேசியதை அவர் பாராட்டினார். “என்னை ஒரு தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக ஆக்கி எனக்கு ஒரு நல்ல பாதையைக் காண்பித்தார். மார்க்சிய வாதியாக மாற்றியுள்ளார் என்பதை நினைக்கும் போது என் மனம் நெகிழ்கிறது. அவரைப் போன்றே என் மூச்சு உள்ளவரை மார்க்சிய வழியில் என் பயணத்தைத் தொடர்வேன் என்பது உறுதி…” வேலூரில் பாரதி புத்தக நிலை யத்தின் பொறுப்பாளராக, மேலாளராக செயல்பட்ட சாவித்திரி, தனது காலத்திற்குப்பின் தனது வீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார்.