districts

img

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுத்தொழிலுக்கு விலக்கு அளித்திட கோரி பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுத்தொழிலுக்கு விலக்கு அளித்திட கோரியும், பட்டாசு ஆலைகளை திறந்திட வலியுறுத்தியும் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள், சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய தேவையில் 95 சதவிகிதம் பட்டாசு உற்பத்தி சிவகாசியை சுற்றி உள்ள 1070 பட்டாசு ஆலைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2015-இல் தற்போதைய ஒன்றிய பாஜக அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால் அலுவலகத்தில் ஜூனியராக இருக்கும் அர்ஜீன்கோபால் என்ற வழக்கறிஞர் பட்டாசு வெடிப்பதால் தில்லியில் கடுமையக காற்று மாசுபடுகிறது. எனவே, தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு வெடிக்க தடைகேட்டு உச்சநீதிமன்றத்தில் 2015-இல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2016-இல் தில்லியில் பட்டாசு வெடிக்க தீபாவளுக்கு முன்பு ஒரு வாரமும், தீபாவளியுடன் ஒரு வாரமும் தடை விதித்தது. இது ஒட்டுமொத்த பட்டாசு விற்பனையில் 25 சதவிகிதம் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

 

இதனைத்தொடர்ந்து, 2018-இல் கொல்கத்தாவை சேர்ந்த நபர், தில்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் 2018 அக்டோபர் மாதம் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது இடைக்கால உத்தரவில் காற்று மாசு ஏற்பட காரணமாக இருப்பதாகச் சொல்லி சரவெடி உற்பத்திக்கு தடை, பட்டாசுகளில் பேரியம் நைரேட்டுக்கு தடை, பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் 2018 நவம்பர் முதல் பிப்ரவரி ஆலைகள்  முழுமையாக மூடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 நாள் நடைபயணம் நடைபெற்றது. மேலும், சிஐடியு சங்கத்தினர் தொழிலாளர்களை திரட்டி உண்ணாவிரதம், கஞ்சிதொட்டி போராட்டம், மனிதசங்கிலி போராட்டம் என நடத்தப்பட்டதால் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டு ஆலைகள் மீண்டும் வேலையை துவங்கின.

தற்போது 2018 உச்சநீதிமன்ற உத்தரவை 2021 லிருந்து கடுமையாக அமுலாக்க வேண்டும் இடைக்கால உத்தரவு அடிப்படையில் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என மீண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பட்டாசு ஆலைகள் நவம்பர் 2021 முதல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலில் ஈடுபடும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டும். சரவெடி, பேரியம் நைட்ரேட் தடையை நீக்கிட வேண்டும்.பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் சிவகாசி-சாட்சியாபுரத்தில் ஊர்வலம் துவங்கி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முருகன் தலைமை வகித்தார்.இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட பொதுச்செயலாளர் எம்.மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் எம்.சி.பாண்டியன் மற்றும் ஆயிரணக்கான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

;