ஈரோடு, ஜன. 13- ஒன்றிய அரசு அலுவலகங்களில் பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வருமான வரி ஊழி யர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சர்க்கிளின் 13ஆவது மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தலைமை வருமான வரி ஆணையர் கீதா ரவிச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், தொழிற்சங்கங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஒன்றிய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றியமைப்பதானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வரும் பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெற்றிபெற வேண்டி யதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். கோவை வருமான வரி ஆணையர் எம்.பூபால் ரெட்டி, ஈரோடு மக்களவை உறுப்பினர் ஏ.கனேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
வருகிற பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஊழியர்களை முழுமை யாக பங்கேற்க வைப்பது, அதையொட்டி அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளை சந்தித்து பிரச்சாரம் செய்வது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பிராந்திய அடிப்படையில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும். எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சம்மேளனத்தின் தலைவராக ஆர்.ஆர்.சியாம்நாத், பொதுச் செயலாளராக எம்.எஸ்.வெங்கடேசன், பொருளாளராக டி.எஸ்.வீரபத்ரம் உள்ளிட்ட 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.