கொச்சி, ஜன.23- புதிய தொழில் முயற்சிகளுக்கான தேசிய அங்கீகாரம் பெற்ற கேரளாவின் ‘ஓராண்டு ஒரு லட்சம் முன்முயற்சி’ திட்டம் கடந்து வந்த பாதையை அமைச்சர் பி.ராஜீவ் கொச்சியில் நடந்த தொழில்முனை வோர் மகா சங்கமத்தில் பகிர்ந்து கொண்டார். அப்போது, புதிய தொழில் முனைவோராக பங்கேற்ற பத்தாயிரத்து க்கும் மேற்பட்டோர் பெருமிதம் அடைந்த னர். எட்டு மாதங்களுக்குள் இலக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் கூறியதும் அரங்கம் அதிர கரவொலி எழுப்பினர். அமைச்சர் மேலும் கூறுகையில், “இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்தபோது, அவர் முயற்சி எடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். முதல்வர் தலை மையில் மாநில அளவிலான கண்கா ணிப்புக்குழு உருவாக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் அதிகாரிகள் குழு, மாவட்ட அளவில் இருந்து உள்ளாட்சி அமைப்பு வரை கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டது. எந்தெந்த சிறு குறு நடுத்தர
தொழில்கள் (எம்எஸ்எம்இகள்) தொடங்க வாய்ப்புள்ளது என்பதை அறிய தொழில் துறை ஆய்வு நடத்தியது. தொடங்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் நான்கைந்து தொழில்களுக்கான கருப்பொ ருட்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் விவாதித்து தொடங்கக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். 1153 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தொழில் கள் மற்றும் மாநில இயக்குனரகங்களின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தாலுகா அலுவலகங்கள் வசதி மையங்களாக மாற்றப்பட்டன. தொழில் துறையினர் தொழில் ரீதியாக பணி யாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 245 நாட்களில் இலக்கு எட்டப்பட்டது. ஏப்ரல் 1 முதல் ஜனவரி 21, 2023 வரை 1,24,249 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ரூ.7533.12 கோடி முதலீட்டை உருவாக்க முடிந்தது. இது போன்ற முதலீடு இது வரை இருந்ததில்லை. 2,67,823 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது. இதில் 38 சதவீதம் பேர் பெண் தொழில் முனைவோர். ஒன்பது திருநங்கைகள் உள்ளனர். கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் சரா சரியாக 10,000 நிறுவனங்கள் பதிவு செய்யப் படுகின்றன. இப்போது வேளாண் உணவு பதப்படுத்தும் துறையில் 21,609 நிறுவனங்க ளும், ஆடை மற்றும் ஜவுளித் துறையில் 13,596 நிறுவனங்களும், மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் 4997 நிறு வனங்களும் உள்ளன. இதன் மூலம் ஒரு நல்ல சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த துறையில் உள்ள அனுபவத்தின் அடிப்படை யில் அடுத்த ஆண்டில் எத்தனை புதிய முயற்சிகளை கொண்டு வரலாம் என்று பயிற்சியாளர்களிடம் கேட்கப்படுகிறது. கீழே இருந்து திட்டமிடல். மாவட்டங்க ளில் எம்எஸ்எம்இ கிளினிக்குகள் தொடங்கப்படும். பிரச்சனைகளைத் தீர்க்க இங்கே இலவச ஆலோசனையைப் பெற லாம். தாலுகா அளவில் சந்தைப்படுத்தல் கண்காட்சி நடத்தப்படும். ஒவ்வொரு தயாரிப்புக்கும் கேரளா பிராண்ட் வழங்கப்படும். இ-காமர்ஸ் தளம் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்றார். கேரளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெருமழை ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் கோவிட் பெருந் தொற்று அந்த மாநிலத்தை உலுக்கி எடுத்தது. வெளிநாடுகள், வெளிமாநிலங்க ளில் வேலை இழந்த பல்லாயிரக்கணக்கா னோர் சொந்த ஊர் திரும்பினர். ஒன்றிய அரசு உருவாக்கிய வேலையின்மைச் சூழலும் சேர்ந்துகொண்டது. இந்நிலை யில் வேலையின்மையை போக்கவும், மக்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புதிய உத்திகளை கேரளா கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்த கேரள அரசு அதை மாபெரும் இயக்கமாகவே மாற்றியுள்ளது. அதன் பிரதிபலிப்பை கொச்சியில் நடந்த புதிய தொழில் முனைவோர் பெரும் திரள் சந்திப்பில் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிப்படுத்தினர்.