சங்க காலத்தில் என்
உயிரை பறித்தான் நன்னன்
பாரி மகள்கள் ஆயினும்
கபிலர் உதவியோட புலம் பெயர்ந்தேன்
பாஞ்சாலியாக சபையில்
துகில் உறிக்கப்பட்டேன்
சீதையாக சிறையெடுக்கப்பட்டேன்
பின் அக்னிப் பிரவேசத்துக்கு ஆளானேன்
ஆசிபாவாக மழலையாயினும்
வன்புணர்வுக்கு ஆளாகி
மாண்டு போனேன்
அடுக்குமாடிக் குடியிருப்பில் மனப் பிறழ்வு
மங்கையாயினும் கூட்டு
வன்புணர்ச்சிக்கு ஆளாகினேன்.
தலைநகர் டெல்லியில் ஷாபியாவாக
ஐம்பது கத்திக் குத்து அல்லாமல் இரண்டு
கொங்கைகளையும் வெட்டி வீசப்பட்டேன்
எனது கொங்கையை அறுக்கும் போது
கூட அவன் தாயின் நினைவு வராதது
அவனது இயலாமையா?
இந்த சமூகத்தின் இயலாமையா?
பெண் என்ற அடையாளம் தான்
எனது இயலாமையா?
கூர்ந்து கேள் சமூகமே!
எதற்கும் அஞ்சேன்!
இயலாமையை உடைத்து மீண்டும் மீண்டும்
நான் ஆதவனாக உதித்துக் கொண்டே இருப்பேன்,
சுட்டெரிக்கும் சூரியானாய் சூடர்விட்டு
பவனி வந்து கொண்டேயிருப்பேன்!
ஏனெனில் நான் “பெண்மை”
சாந்தி சரவணன்