சென்னை, ஆக.31- நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: செப்டம்பர் - 1 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரகத்துக்கு ரூ.100ம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒன்றிய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கொள்முதல் நெல்லுக்கான விலை உயர்வு மிகவும் குறைவு என்பதை சுட்டிக்காட்டுகிறோம். வேளாண் விளை பொருள் விலை நிர்ணய கமிஷன் இந்த ஆண்டு நெல்லுக்கு உற்பத்தி செலவு மட்டுமே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1805 என்று நிர்ணயித்துள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தி தீர்மானித்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2707.50 வழங்க வேண்டும். கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2820 கொடுத்து கொள்முதல் செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கூடுதல் ஊக்கத் தொகைக்குப் பிறகும் சாதாரண ரகத்துக்கு ரூ.2115ம், சன்னரகத்துக்கு ரூ.2160 மட்டுமே கொள்முதல் நிலையங்கள் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு விலை கிடைக்கும்.
கிலோவுக்கு ஒரு ரூபாய்
விதை, உரம், பூச்சி, மருந்து, டீசல் போன்றவற்றின் விலை உயர்வு காரண மாக உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய - மாநில அரசுகள் கிலோவுக்கு தலா 1 ரூபாய் மட்டுமே உயர்த்தி அறிவித்துள் ளது. இந்த அறிவிப்பு அதிகரித்துள்ள செலவை ஈடு செய்வதாக இல்லை. இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கை யில், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்வதுடன், உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம். விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து கட்டாய வசூல் செய்வது, போன்ற நடவடிக்கை கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாது காப்பாக வைப்பதற்குரிய தற்காலிக கிடங்குகளை போதுமான அளவிற்கு அரசு ஏற்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.