சிவகங்கை, ஏப்.6- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பிடித்தனர். 65 கிலோ எடை பிரிவு உள்ள மாணவ-மாணவிகளுக்கு கபடி போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி கபடி அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்தது. கபடி அணியின் பயிற்சியாளர் முனைவர் உதவி பேராசிரியர் வழிநடத்தினார். வெற்றி பெற்றவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி, பல்கலை பதிவாளர் சேகர், தேர்வாணைய கண்ணபிரான், உடற்கல்வி இயக்குநர் முனைவர் செந்தில்குமரன், அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் டிவி ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தினர்.