districts

img

கோயில் நடைபாதை ஆக்கிரமிப்பு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர், ஜூன் 6 - பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.  அப்போது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராம காலனியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், தங்களது காலனி அருகே ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். அந்த கோயிலின் பரப்பளவு சுமார் 19 செண்ட் உள்ளது.  இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சையத்மீரா மற்றும் காஜா என்பவர்கள் கோயிலுக்கு செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து இடையூறு செய்து வருகின்றனர். மேலும், தற்போது இக்கோயிலின் பரப்பளவு குறைந்துள்ளது.  உடனடியாக ஆக்கிரமித்துள்ள நடைபாதையினை மீட்க வேண்டும். இதுமட்டுமின்றி இப்பகுதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அடிக்கடி சாதிப் பிரச்சனையும் வருகிறது.  எனவே ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் குன்னம் வட்டக்குழு சார்பாக கேட்டு கொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், குன்னம் வட்டச் செயலாளர் சி.செல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;