புதுச்சேரி, ஜன. 2- பொதுமக்களுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் ஆபாச நடன மது பான விடுதிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என கலால் துறை இணை ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பள்ளி, கோவில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் தள்ளி மதுபான விடுதிகள் அமைக்க வேண்டும் என ஏற்கனவே புதுச்சேரி அரசின் கலால்துறை சட்டம் வகுத்திருந்தது. ஆனால் தற்போது 50 மீட்டர் தூரத்திலேயே மதுபான விடுதிகள் அமைப்பதற்கு உரிமம் வழங்கலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஆபாச நடன மதுபான விடுதிகளில் பெண்களை அழைத்து வந்தால் பெண்களுக்கு மதுபானம் இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் மதுபான விடுதிகளின் உரிமங்களை கலால்துறை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.