districts

img

அரிமளம் பேரூராட்சிக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தை கொண்டு வர முயற்சிப்பேன் சிபிஎம் வேட்பாளர் ஜி.நாகராஜன் வாக்குறுதி

புதுக்கோட்டை, பிப்.7 - அரிமளம் பேரூராட்சிக்கு தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூறுநாள் வேலைத் திட்டத்தை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார் 1 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஜி.நாகராஜன். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அரிமளம் பேரூராட்சியில் 1 ஆவது வார்டு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் போட்டியிடுகிறார். கடந்த மூன்று நாட்களாக கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருக்கு அனைத்து வீடுகளிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். “பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக எந்த நேரத்திலும் களத்தில் நின்று போராடும் நராகராஜூக்கே எங்கள் ஓட்டு. யார் எவ்வளவு பணத்தை செலவழித்தாலும் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் வெற்றி பெறுவது உறுதி” என தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாக்காளர்களிடையே பேசிய வேட்பாளர் ஜி.நாகராஜன், “நான் வெற்றி பெற்றால் இப்பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும். தட்டுப்பாடின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும், தெருவிளக்குகளை சரிசெய்யவும் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவேன்.  மேலும், இந்த 1 ஆவது வார்டுக்கு மட்டுல்லாது அரிமளம் பேரூராட்சிக்கே நூறுநாள் வேலைத் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியுள்ளது. நான் வெற்றி பெற்றால் பேரூராட்சி மன்றத்தின் மூலமாக தீர்மானம் கொண்டு வந்து நூறுநாள் வேலைத் திட்டத்தை அரிமளம் பேரூராட்சிக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வேன்” என்றார். இதற்கு வாக்களர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வேட்பாளருடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வீ.ராமையா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சோலையப்பன், காயத்ரி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

;