புதுக்கோட்டை, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.
பெண்மையை போற்றுவோம், வாசிப்பை நேசிப்போம், நூலைப்படி, மக்கள் வாழ்வியல் அறிவியல், அறிவை விரிவு செய், இனிக்கும் இலக்கியம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளும், பக்கம் பக்கமாய் வாழ்க்கை, படிப்பு எனும் சிறகை விரி என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகளும், திருக்குறள் காட்சிகள், இலக்கிய காட்சிகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகளும் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன்,அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் கலைச்செல்வி, சத்யா, ஜெயின் ஜோசப் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் பாலா, நகரப்பட்டி அரசுப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்தி ஆகியோர் பங்கேற்று போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் ராசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.