புதுக்கோட்டையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட 6 பேரை காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ச.அப்துல் மஜீத் (33). இவர் புதுக்கோட்டை நகராட்சி 23 ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தமையிலான காவலர்கள் செவ்வாயன்று இரவு அப்துல் மஜீத் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அப்துல் மஜீத்தை விசாணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இதில் தொடர்புடைய பெரியார் நகரைச் சேர்ந்த முரளி (36), திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வட்டம், அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த சர்மா (20), கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்த நரேந்திரகுமார் (27), முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (34), காந்தி நகரைச் சேர்ந்த மியாகனி (22) ஆகிய 6 பேரையும் காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 8 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், புதனன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.