districts

img

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் இளைஞர் தற்கொலை! அதிகாரி பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை

திருவாரூர், மே 12- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கமுதகுடியை சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் (25). திருமணமானவர். இவருக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மணிகண்டனின் தாயார் லதா, வீடு ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.  வீடு கட்டும் பணி தொடங்கிய நாள் முதல் இவரால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாளவில்லை. குறிப்பாக நன்னிலம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் கட்டுமானப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளார்.  இந்நிலையில் மூன்றாவது கட்ட பணிகளுக்கு தவணைத்தொகை விடுவிக்க 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே வெளிநாடு போக வைத்திருந்த பணத்தையும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் கட்டுமானப் பணிகளுக்கு செலவழித்துள்ளார்.  மேலும் தன்னால் பணம் கொடுக்க இயலாது என்பதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவொன்றை மணிகண்டன் வெளியிட்டு, புதனன்று விஷம் அருந்திவிட்டார். இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான மேற்பார்வையாளர் மகேஸ்வரனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன் உயிரிழந்திருப்பதால் மகேஸ்வரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

;