புதுக்கோட்டை, செப். 20- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 6 ஆவது மாநாடு, சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சமி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ரேவதி வாசித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே.லதா வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவுரியம்மாள் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி தோழமை சங்க நிர்வாகிகள் கே.முகமதலிஜின்னா, எஸ்.பாலசுப்பிரமணியன், சி.மாரிக்கண்ணு, கே.மல்லிகா ஆகியோர் பேசினர். மாநாட்டில் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி நிறைவுரையாற்றினார். தலைவராக எம்.விஜயலெட்சுமி, செயலாளராக கே.லதா, பொருளாளராக எஸ்.சவரியம்மாள், மாநில செயற்குழு உறுப்பினராக கே.எம்.ரேவதி, துணைத் தலைவர்களாக ஜெயலலிதா, சுலோச்சனா, அற்புதமேரி, சூரியகாந்தி, துணைச் செயலாளர்களாக ஏ.சி. செல்வி, அருமையம்மாள், கலைச்செல்வி, மலர்கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.அருமையம்மாள் நன்றி கூறினார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின்படி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது. அனைத்து மையங்களுக்கும் இணயதள வசதியுடன் 5 ஜி செல்பேசிகளையும், 5 ஜி சிம் கார்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.