districts

தனியார் பேருந்துகளில் பயணிக்க கட்டாயப்படுத்தும் இடைத்தரகர்கள் தடுக்க நடவடிக்கை கோரி சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, செப்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜங்ஷன் பகுதி செயலாளர் ரபீக்அகமது மற்றும் பகுதிக்குழு உறுப்பினர் வள்ளி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் மாநகர பகுதிகளில் இயங்கும் வாகனங்களில் ஏர்காரன், எல்இடி முகப்பு விளக்குகள் பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து பராமரிக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வரும் பொதுமக்களை அங்குள்ள இடைத்தரகர்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்க கட்டாயப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தில் பொது குடிநீர் குழாய்களை கூடுதலாக அமைக்க வேண்டும். அங்குள்ள பொது கழிப்பிடத்தில் கட்டண நிர்ணயம் செய்து அதனை கட்டண அறிவிப்பு பலகையில் வெளிவிட வேண்டும்.  பொதுமக்கள் வரக்கூடிய பாதையை அடைத்து தனியார் பேருந்துகள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

;