அரியலூர், செப். 4- அரியலூர் வாரச்சந்தை அருகில் உள்ள பொதுப்பாதையை மீட்டுத் தருவதற்கான போராட்டத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி இரண்டு மாத அவகாசத்தில் பாதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரவு வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பிரச்சனையின் பின்னணி அரியலூர் செட்டி ஏரியை ஒட்டியுள்ள வண்டிப்பாதையை கடந்த 70 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் மாவட்ட காவல் துறை குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டபோது, வருவாய் துறையினர் இந்தப் பொதுப்பாதையை காவல்துறை பயன்பாட்டிற்கு மாற்றினர். இதனால் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் உட்பட 10 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் நிர்வாக மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். இரண்டு மாத அவகாசத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பாதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார். போராட்டம் ஒத்திவைப்பு மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தது. இரண்டு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பெ.சண்முகம் எச்சரித்தார். போராட்டத்தில் கே.கிருஷ்ணன், துரை அருணன், பி.துரைசாமி, ஆர்.தமிழ்ச்செல்வன் உட்பட குடியிருப்பு வாசிகளும் கலந்துகொண்டனர். (ந.நி)