தஞ்சாவூா், பிப்.26- மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, தஞ்சையில் மாணவர் அமைப்பினர் ஆத்துப்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எல்ஐசி அலுவலகம் முன்பு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயநிதி மாசி வரவேற்றார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆசாத் மகேந்திரன் தலைமை தாங்கினார். திராவிட மாணவர் கழகம் மாநிலச் செயலாளர் செந்தூரப் பாண்டியன், இந்திய மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் அர்ஜுன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தலைவர் செல்வி, ம.தி.மு.க மாவட்டத் துணை அமைப்பாளர் நவீன், தஞ்சை மண்டல சமூக நீதி மாணவர் இயக்கச் செயலாளர் ஷாகுல் ஹமீத், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்டத் தலைவர் சின்ன ஜெயப்பிரகாஷ், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்டத் தலைவர் முகமது உமர் அலி, இந்தியா மாணவர் மாவட்டத் தலைவர் பார்த்திபன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழகத்திற்கான கல்வி வளர்ச்சி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தி.மு.க மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகில் வேந்தன், துணை அமைப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், உதயநிதி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் வாசிம்ராஜா, இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெனிபர், ஹரிஷ், மாவட்டகுழு உறுப்பினர்கள் அனிட்டாமேரி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.