districts

தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஆக.8 - மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஒரு தலைமுறையில் கற்ற கல்வியானது ஏழு தலைமுறைக்கும் அது உதவும். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைபடி, மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாநில அளவிலான அடைவுத் தேர்வை பொறுத்தவரை, 9,80,340 மாணவர்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடங்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்களும் கேள்விகள் கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். உங்கள் பள்ளிகளை பொறுத்தவரை, நீங்கள் எப்படி கேள்விகளை கேட்க வேண்டும் என தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.  நாம் பாடம் நடத்தும் போது, அவர்களுக்கு புரிகிறதா என்பதை அறிந்து நடத்த வேண்டும்.  நீங்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். எடுக்கும் புதிய முயற்சி வெற்றி அடைந்தால் அதை அனைவருக்கும் பகிர வேண்டும். கல்விக்கு இன்றைய சூழலுக்கு ஏற்றதுபோல் கற்றுத்தர வேண்டும். நாம் குருவாக இருக்கும் போது, பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நமது பார்வை பள்ளிக்குள் நுழைந்ததும் 360 டிகிரி அளவில் இருக்க வேண்டும். அனைவரையும் கண்காணித்து நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும்.  கணிதம் சார்ந்து நிறைய கேள்விளை கேட்க வேண்டும். அதுபோல, ஆங்கிலம் சார்ந்தும் கேட்டு, அவர்களின் அறிவுத் திறனை வளர்க்க வேண்டும். பாடம் சார்ந்து வரும் ஏதேனும் நிகழ்வுகளை கூறி மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்களிடத்திலும் தனி கவனம் செலுத்தி அவர்களை வழிநடத்த வேண்டும். இப்பொழுது உள்ள மாணவர்கள் கைப்பேசி வழியிலேயே நிறைய கற்றுக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.

எனவே, ஆசிரியர்கள் அதைவிட அதிகமான விஷயங்களை தெரிந்து கொண்டு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.  நல்ல தேர்ச்சி விகிதத்தினை நீங்கள் தர வேண்டும். கம்ப்யூட்டர் மூலமாகவும் நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இது போன்ற வசதிகளை ஏற்படுத்தி தந்தவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர். மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி செல்லும் போது, பாடங்களை புரிந்து கொண்டு செல்ல வேண்டும். உங்களிடம் கருத்துகளை கேட்டு அதன்மூலம் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். அடைவுத் தேர்வை பொறுத்தவரை மயிலாடுதுறை மாவட்டம் 12 ஆவது இடத்தில் உள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்புகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த அடைவுத்தேர்வினை மிக சிறப்பாக மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் 5 இடத்திற்குள் மயிலாடுதுறை மாவட்டம் வருவதற்கு திட்டமிடுதல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இக்கூட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 488 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இணை இயக்குநர் (பள்ளிக் கல்வித்துறை) ஆர்.பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சி.சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் கி.அன்புமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) க.குமரவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியார் முத்துக்கணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.