கும்பகோணம், நவ.27 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் ஆரியப்படையூர் ஊராட்சி இந்திரா நகரில் சுமார் 200 ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நகரில் சிறுமழை பெய்தால்கூட தெருக்களில் ஆறுபோன்று தண்ணீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் குடிதண்ணீர் உள்ள குழாய் அருகே சாக்கடை கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் குடிநீரில் சாக்கடை கலக்கும் முன், சாக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆரியப்படையூர் ஊராட்சி இந்திரா நகரில் சாலையை மேம்படுத்தி தண்ணீர் தேங்காமல் செப்பனிட வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது பெய்துள்ள மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையிலேயே தேங்கி நின்று, வீட்டுக்குள் புகும் நிலையில் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆரியப்படையூர் ஊராட்சி இந்திரா நகர் சாலையை மேம்படுத்தி, மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்திரா நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அப்பகுதி மக்களின் சுகாதாரம் காக்கப்படுமா?