புதுக்கோட்டை, பிப்.26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகளின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மு.அருணா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: அறந்தாங்கி அருகே, செயல்பட்டுவரும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், நெல்மணிகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளில் 17 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள தரமான நெல்மணிகள் எவ்வித பணப்பிடித்தமும் இன்றி கொள்முதல் செய்யப்படும். இந்த நெல்மணிகளை நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்று அரசு நிர்ணயம் செய்த தொகையினை வங்கி பணப்பரிவர்த்தனை மூலமாக பெற்று பயனடையலாம். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, பாதுகாப்பான முறையில் பராமரித்து நெல் சேமிப்புக் கிடங்கிற்கு விரைவாக கொண்டு சேர்த்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள, தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வுகளின்போது, அறந்தாங்கி வட்டாட்சியர் க. கருப்பையா, கண்காணிப்பாளர் ஆனந்தன், இளநிலை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.