districts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு காவல் ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி, அக்.16 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி காவல் ஆணையர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள், 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள, பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத் தோப்பு, சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு வி.பி.ரோடு கெயிட்டி திரையரங்கம் உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் சோபிஸ் கார்னர் இறுதியில் உள்ள ரயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக மொத்தம் 710 காவல் அதிகாரிகள் மற்றும்  காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;