பெரம்பலூர், ஜன.13 - அரசு அறிவித்த கொள்முதல் விலையை வழங்கக் கோரி பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பால் லிட்டர் ஒன்றுக்கு 33 ரூபாய் என ஊற்றி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், லிட்டருக்கு 3 ரூபாய் கொள்முதல் விலை உயர்வு அறிவித்தார். ஆனால் அந்த உயர்வை இதுவரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை என்று கூறி சனிக்கிழமை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜ் வளைவு பகுதியில், பால் உற்பத்தியாளர்கள் பால் கேன்களுடன் காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆவின் நிறுவன ஏரியா மேனேஜர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் பால் கறக்கும் சொசைட்டிக்கு வரவழைத்தார். அங்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் என்.செல்லதுரை தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பால்வளம் துணைப் பதிவாளரிடம் தெரிவித்த போது, பொங்கல் விடுமுறை முடிந்தவுடன் கூட்டம் நடத்தி அனைத்து கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.