பெரம்பலூர், செப். 4- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வணிகவரித் துறையின் சார்பில், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்தும், வரி பிடித்தம், நமூனா தாக்கல் கட்டாயமாக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்தும் விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலான கூட்டம் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டம் 2017 பிரிவு 24-ன் படி TDS பிடித்தம் செய்ய வேண்டிய அனைத்து அரசுத்துறைகள் / நிறுவனங்கள் கட்டாயம் பதிவெண் பெறுதல், TNGST சட்டம் 2017 பிரிவு 51(1)-ன் கீழ் அரசுத்துறைகள் / நிறுவனங்கள் ரூ2,50,000-க்கு அதிகமாக திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது TDS பிடித்தம் செய்தல், பிடித்தம் செய்யப்பட்ட 2 சதவீதம் வரியை நமூனா வாயிலாக அரசு கணக்கில் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து வணிக வரித்துறையினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வணிகவரித்துறை துணை ஆணையர் ந.சத்தியபிரியா, பெரம்பலூர் வரிவிதிப்பு சரக மாநிலவரி அலுவலர் இரா.ரவிச்சந்திரன், மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.