districts

பொது பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் குமரி ஆட்சியர் வேண்டுகோள்

நாகர்கோவில், செப்.30- மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : குப்பையில்லா இந்தியாவை உருவாக்க நாடு முழுவதும் 2023 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை தூய்மையே சேவை இயக்கம் கிராம ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக  அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் நாடு தழுவிய அளவில் பொது இடங்கள் தூய்மைபடுத்தும் செயல்பாடு காலை 10 மணி முதல் 1மணி நேரம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட பொது பகுதிகளில், கிராம ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழு அங்கத்தினர்கள், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள், சுகாதார ஊக்குநர்கள் மற்றும் பொது மக்களை பெருமளவில் ஈடுபடுத்தி தூய்மைபடுத்தும் செயல்பாடுகள் மேற்கொள்ளவுள்ளது. மேற்காணும் செயல்பாடுகளில், மக்கள் வசிக்கும் பொது இடங்களை தூய்மைப்படுத்துதல், கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்கள், சந்தை பகுதிகள், சாலையோரங்கள், சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், அரசு மற்றும் அரசு சாரா அலுவலக பகுதிகள், நீர் நிலைப் பகுதிகள், மலையோர பகுதிகள், பேருந்து நிறுத்த பகுதிகள், மற்றும் இதர பகுதிகளான அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மொத்தம் 7704 நபர்கள் பங்கேற்பதை உத்தேசமாகக் கொண்டு தூய்மையே சேவை செயல்பாடு நடைபெற உள்ளது. இச்செயல்பாடுகளில் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பொது மக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அதில் கூறியுள்ளார்.