districts

img

போராடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப். 20-  தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன் 33 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  போராட்டத்தை ஆதரித்து, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகில், வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, பெல் சிஐடியு சங்க செயற்குழு உறுப்பினர் எம்.ஜி. குமார், தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் எம்.வி.செந்தமிழ் செல்வன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் அஸ்லம் பாஷா, அஞ்சல் ஆர். எம்.எஸ் ஓய்வூதியர் சங்க கன்வீனர் மாணிக்கத்தாய், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் அருள்தாஸ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன் நிறைவுரையாற்றினார். இதில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தோழமை சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டி.என்.எஸ்.டி.சி திருச்சி - கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

திருவாரூர் 

திருவாரூர் சிஐடியு மாவட்ட குழு சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.மாலதி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் அ.பிரேமா,கே.கஜேந்திரன், கே.பி.ஜோதிபாசு மற்றும் அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர் சங்கத்தின் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியூ மாவட்ட கன்வினர் அகஸ்டின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ரெங்கநாதன், பெரியசாமி, அறிவழகன், சந்திரன் சிவசங்கர், பிரகாஷ் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாகப்பட்டினம்

போக்குவரத்து தொழி லாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராடும் தொழிலாளர்களை அழைத்துப்பேசி உடனே தீர்வு காண வலியுறுத்தியும் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ. சிவனருட்செல்வன் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விரைவு போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.கணபதி, ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜூ, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.கவிதா, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் குருசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி.குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட நிர்வாகிகள் பி.டி.பகு, கே.தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நன்றியுரையாற்றினார்.