அறந்தாங்கி, ஆக.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வேள்வரை ஸ்ரீஐந்து வேம்பு காளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி, மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய மாட்டு பிரிவில் 8 மாட்டு வண்டிகளும், நடுமாட்டு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சின்ன மாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும் என மொத்தம் 36 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் இதில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணமும் கேடயமும் வழங்கப்பட்டது. விழாவை வேள்வரை கிராமத்தினரும் இளைஞர் மன்றத்தினரும் சேர்ந்து நடத்தினர். பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர்.