திருவாரூர், செப். 4- திருவாரூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.முரளி மீது. புதன்கிழமை அவரின் வீட்டில் வைத்து சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். இதனை அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள், சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று நடந்த சம்பவத்தை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 14 வார்டு கோவில்பத்து-பாதிரிபுரத்தில் உள்ள தீண்டமை சுவர் உள்ளதைக் கண்டித்தும், தீண்டமை சுவரை அகற்றும் போராட்டத்தில் முன்னெடுத்து செயல்பட்டு வரும் வலங்கைமான் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்டத் தலைவருமான கே.முரளி மீது, குண்டர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில், அவரது தாயார் மற்றும் துணைவியாரும் தாக்கப்பட்டு, கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தோழர் முரளியை கழுத்து, தோள்பட்டை மற்றும் கை, கால்களில் கட்டையால் சமூக விரோதிகள் அடித்ததில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது தாயாரின் காதில் அணிந்திருந்த தோடையும் அறுத்துள்ளனர். இதனால், காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதே போல் முரளியின் மனைவிக்கு கை,கால்களில் அடிபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக்கோரி வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. கும்பகோணம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தோழர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் கே. தமிழ்மணி மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, பி.கந்தசாமி, வலங்கைமான் ஒன்றிக்குழு உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
