districts

img

வக்கம்பட்டியில் சாலையோரம், மயானத்தில் எரிக்கும் குப்பைகளால் மக்கள் அவதி  

சின்னாளபட்டி, ஜூன் 10- வக்கம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரத்திலும் மயானத்திலும் எரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வக்கம்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் அவற்றை மறுசுழற்சி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் திண்டுக்கல்-செம்பட்டி சாலையில் உள்ள மயானத்தில் குழிதோண்டி குவித்து வைத்து எரிக்கிறது .குப்பைகளில் இருந்து கிளம்பும் புகையால் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மயானத்தில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகம் குழி தோண்டி அதில் குப்பைகளை குவித்து வைக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய தோண்டும் போது குப்பைக் கழிவுகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதவிர ஊராட்சி நிர்வாகம் கும்மம்பட்டி செல்லும் சாலையில் குடகனாற்றின் கரையோரமும் குப்பைகளை குவித்து வைப்பதால் மழை பெய்யும் போதும், குடகனாற்றில் தண்ணீர் வரும்போதும் குப்பைகள் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரில் கலந்து செல்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மற்றும் மண்வளமும் பாதிக்கப்படுகிறது.  இதில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வக்கம்பட்டி ஊராட்சியில் சாலையோரம் குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;