20 ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லாமல் சுகாதார சீர்கேட்டில் வாழும் ஆதிதிராவிட மக்கள், அடிப்படை வசதிகளை செய்து தர கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பண்ணப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் புறக்கணிப்பதாக இந்த மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்ற போது வருவாய்த்துறையினர் முறையாக அளவீடு செய்யாமல் தங்கள் பகுதியில் இருந்து சாக்கடை கால்வாய் வெளியேறும் பாதையை அடைத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனால் இந்த பகுதி முழுவதும் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் வீடுகளின் முன்பாகவே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் போவதால் குடியிருப்பதற்கு லாயக்கற்ற நிலையில் வாழ்கின்றனர். மேலும் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையிலேயே தூங்கும் நிலை இருப்பதாக இப்பகுதி மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இந்த தொகுப்பு வீடுகளை செப்பனிட பராமரிப்பு தொகை கூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தர மறுப்பதாகவும் கூறுகின்றனர். தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட முகமைகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன் வரவில்லை என கூறுகின்றனர்.
சாலை வசதி, சாக்கடை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தங்களது ஆதிதிராவிடர் காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து சீர் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்கள் பகுதிக்கும் விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி மக்கள் மிகுந்த ஆவலோடு அரசின் கரங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.