districts

img

தேசிய அளவிலான கலைத் திருவிழாவில் தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்று சாதனை

தேசிய அளவிலான கலைத் திருவிழாவில், தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து வகையான பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கலைத்திருவிழா தேசிய அளவிலான போட்டிகளை கடந்த 7 ஆ‌ண்டுகளாக நடத்தி வருகின்றன.

இந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதன்முறையாக, தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு மாணவன் ஆர்.சரண் பங்கேற்று, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்து, போட்டியில் ஒப்படைத்தார். 

போட்டிகளின் முடிவுகள் கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மாணவர் ஆர்.சரண் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவன் சரணுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம், வெண்கலப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவன் சரண் மற்றும் அவரது பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவக்குமார் வாழ்த்தி சாதனை படைத்த மாணவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய அளவில் பங்குபெற்று வெற்றிபெற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

;