districts

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள தமிழக அரசு நோட்டீஸ்

தஞ்சாவூர், பிப்.26 - தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகம், தமிழ்நாடு அரசு திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கிய 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளது.  இக்கட்டிடங்களை நான்கு வாரங்களுக்குள், அதாவது மார்ச் 24 ஆம் தேதிக்குள் அகற்றுமாறு, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் வட்டாட்சியர் மணிகண்டன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டினர்.  தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்த வெளிச்சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும், பல்கலைக்கழக நிர்வாகம் நிலத்தை ஒப்படைக்காமல் உள்ளது.  இதையடுத்து, தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழு தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், அதில் நான்கு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.  ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகிகளிடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் தகவல் தெரிவிக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.