districts

மே 24 மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு தூர்வாரும் பணிகளை முழு வீச்சில் முடிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 21 -  எதிர்பாராத நிலையில், முன் கூட்டியே மேட்டூர் அணை மே 24 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி வருவதால் முன்கூட்டியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:  “எதிர்பாராத அதிகளவிலான நீர்வரத்தின் காரணமாக, மேட்டூர் அணை ஜூன் 12-க்கு முன்பாக, மே 24 அன்று தண்ணீர் திறக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது ஆறு, வாய்க்கால், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி துவக்க நிலையிலேயே உள்ளது. தண்ணீர் சென்று சேறும் ஏ,பி,சி,டி வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேருவதில் மிகவும் சிரமமான நிலையே உள்ளது. வடிகால்களும் தூர்வாரும் பணியும் பெரும்பாலும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தி முழுவீச்சில் பணிகளை நிறைவேற்றிட வேண்டும். விவசாயிகள் எதிர்பார்த்திராத, எந்த வித தயாரிப்பும் செய்யாத நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் உடனடியாக விதை உள்ளிட்ட இடுபொருட்கள், உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திட உரிய நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். விவசாயிகள் விவசாயப் பணி மேற்கொண்டிட அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாய கடன் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, விவசாயிகளின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;