தஞ்சாவூர், ஜூலை 5 - பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான அன்பரசனுக்கு, கடந்த சனிக்கிழமை சென்னை ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “கிராமப்புற மக்கள் மருத்துவ சேவை” விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் மரு.ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மருத்துவத்துறை செயலாளர் பி.செந்தில்குமார், கூட்டுறவு மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி., ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்திய மருத்துவ சங்க மாநிலச் செயலாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், மாநில பொருளாளர் வி.என்.அழகவெங்கடேசன், மரு.சிங்காரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். விருது பெற்று ஊர் திரும்பிய மரு.அன்பரசனை, இந்திய மருத்துவ சங்கம் பட்டுக்கோட்டை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.