தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது திடீரென 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சித்ரா, அந்த ஹோட்டலுக்கு சென்று, ஆய்வு செய்து ஹோட்டலை மூட உத்தரவிட்டனர்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கடை ஊழியர்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடையின் பின்புறமாக அவசர அவசரமாக காரில் எடுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.